
– பி.கு.பாலாஜி, பிரம்மா குமாரிகள், புதுக்கோட்டை
சிவபுரம் என்ற கிராமத்தில் வயதான பெரியவர் ஒருவர் எப்பொழுது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசல் அமர்ந்தபடி பகவத் கீதையை படித்துக் கொண்டே இருப்பார். சுப்பிரமணி என்ற இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக் கொண்டே இருந்தான். ஒரு நாள் சுப்பிரமணி அந்த பெரியவரிடம் வந்து “தாத்தா எப்பொழுதும் இந்த புத்தகத்தையே படித்துக் கொண்டிருக்கிறீர்களே , இதை எத்தனை நாட்களாக படிக்கிறீர்கள்?” என்று கேட்டான். “ஒரு ஐம்பது ஆண்டுகளாக படித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார் பெரியவர். “அப்படியென்றால் இந்த புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்குமே, திரும்பவும் ஏன் படிக்கிறீர்கள்” என்று பதில் கேள்வி கேட்டான். “எனக்கு ஒரு சிறிய உதவி செய்வாயா? உன் கேள்விக்கு நான் பிறகு பதில் அளிக்கிறேன்” என்று கேட்டார் அந்த பெரியவர். “என்ன உதவி செய்ய வேண்டும்?” என்று கேட்டான். பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்திலிருந்த மூங்கில் கூடையை எடுத்தார். அதில் அடுப்புக் கரி இருந்தது. அதை ஒரு மூலையில் கொட்டினார். பல நாட்களாக அந்த கூடையில் அடுப்புக் கரி இருந்ததால் அதன் உட்புறம் கருப்பாகவே மாறியிருந்தது. “தம்பி, அதோ அங்கிருக்கும் பைப்பில் இருந்து இந்த கூடையில் சிறிது தண்ணீர் எடுத்து வா” என்று கூறினார். நான் கேட்ட கேள்விக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என்று நினைத்த சுப்பிரமணிக்கு சிரிப்பு வந்தது.
இருந்தாலும் பெரியவர் கூறிவிட்டார் என்பதற்காக கூடையை எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான். ஆனால் அவன் வந்து சேர்வதற்குள் கூடையிலிருந்த எல்லா தண்ணீரும் ஒழுகிப் போனது. “இன்னும் ஒருமுறை எடுத்து வா” என்று பெரியவர் கூறினார். இளைஞன் மீண்டும் முயன்றான். ஆனால் மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்? மீண்டும் சிந்திப்போனது. “தாத்தாவிற்காக இன்னும் ஒரே ஒருமுறை தண்ணீர் கொண்டு வா” என்று பெரியவர் கேட்டுக் கொண்டார்.
இம்முறை மட்டும் எப்படியாவது தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் சென்று விட வேண்டும் என்ற முடிவிற்கு வந்தான் இளைஞன். இவர் மீண்டும் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தான். வழக்கம் போல் எல்லா தண்ணீரும் தரையில் சிந்தி விட்டது. “பெரியவரே, இந்தாங்க, உங்க கூடை, இதில் தண்ணீர் நிற்காது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? எதற்கு இவ்வளவு பாடுபடித்தினீர்கள்?” என்று கேட்டான்.
அதற்குப் பெரியவர் தம்பி சுப்பிரமணி, இதில் தண்ணீர் நிற்காது என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் நீ முதல் முறை தண்ணீர் பிடிக்க சென்ற பொழுது இதன் உட்புறம் எப்படி யிருந்தது? என்று கேட்டார். ரொம்ப அழுக்கு பிடிச்சு கருப்பாக இருந்தது என்று பதிலளித்தான். இப்பொழுது எப்படியிருக்கிறது? என்று கேட்டார். தண்ணீர் பட்டு பட்டு கூடையின் உட்புறம் சுத்தமாகி இருந்தது. தம்பி நீ கேட்ட கேள்விக்கு பதில் இது தான். எத்தனை முறை தண்ணீர் பிடித்தாலும் மூங்கில் கூடை நிறையவே இல்லை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் கூடை சுத்தமாகிக் கொண்டே இருந்தது. அதுபோலத் தான் எத்தனை முறை படித்தாலும் கீதை மனப்பாடம் ஆகிவிடும் என்று கூற முடியாது. ஆனால் படிக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள் இருக்கும் அசுத்தம், கறைகள் சுத்தமாகிக் கொண்டே இருக்கும் என்று கூறினார். இளைஞனுக்கு என்னென்னவோ செய்தது. பெரியவரே, எனக்குள்ளேயும் நிறைய அழுக்குகள் இருக்கிறது. எனக்கும் இந்த புத்தகம் கிடைக்குமா? என்று கேட்டான் சுப்பிரமணி. நிச்சயமாக என்று கூறிய பெரியவர் வீட்டிற்குள் இருக்கும் ஒரு பகவத்கீதை புத்தகம் எடுத்து வந்து கொடுத்தார்.
இறைவன் கூறுகின்றார் # இனிய குழந்தைகளே! நான் கூறும் ஞான மகாவாக்கியங்களை தினமும் கேளுங்கள், கேட்க கேட்க உள்ளுக்குள் இருக்கும் அசுத்தங்கள் நீங்கி சுத்தமானவர்களாக ஆகிவிடுவீர்கள். அதனால் தான் என்னை பதீத பாவனன் என்றும், பாபகடேஷ்வரர் என்றும் கூறி அழைக்கிறீர்கள்.


