பி.கு. குணசுந்தரி, தூத்துக்குடி
ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம் !
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம் – கண்ணதாசன்
இவ்வுலகம் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம் பண்புடையவர்கள் பலர் வாழ்ந்தாலும் வாழ்ந்து கொண்டிருப்பதாலும் தான் என்கிறார் திருவள்ளுவர். பண்புகளில் தலைமையிடம்வகிப்பது,கோபம் கொள்ளாமல் அன்பால் எவரையும் அரவணைத்தலே ஆகும். பொறாமை கொண்டவன் நண்பனை இழக்கின்றான், கர்வம் கொண்டவன் கடவுளை இழக்கின்றான் கோபம் கொண்டவன் தன்னையே இழக்கின்றான் கோபம் வந்தால் “அப்புறம் நான் மனுசனா இருக்கமாட்டேன்” என்று பலர் ஆத்திரத்தில் கூறுவதிலிருந்தே தெரிகிறதே அவர்கள் மிருகமாக மாறிவிடுவார்கள் என்று. கோபம் வாயைத்திறக்கும் ஆனால் கண்களை மூடிவிடும்! கோபம் கொள்ளும் ஓவ்வோரு நிமிடமும் நீ 60 விநாடி மகிழ்ச்சியை இழக்கின்றாய் என்பதெல்லாம் பலருக்கு தெரிந்த பொன்மொழிகள், கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்னும் பழமொழி இருக்கிறதே என்றும் சிலர் நினைக்கலாம், உண்மையிலேயே, கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பதே அதன் அர்த்தம். மிடுக்கும் துடுக்கும் நிறைந்த படைத்தளபதி ஒருவன் அவன் ஊரில் புகழ் பெற்ற தத்துவ ஞானியைச் சந்தித்து கேட்டான் நீங்கள் அனைத்தும் அறிந்த அற்புத மகான் என்று ஊரில் பேசிக் கொள்கிறார்களே, சொர்க்கமும் நரகமும் எங்கெங்கோ உள்ளன என்று எனக்குத் துல்லியமாக கூற முடியுமா அதிகார தோரணையில் அவன் கேட்டதால் ஞானி அவனைப் பார்த்து முதலில் நீ யார் ? என்று எனக்குச் சொல் என்றார் நான் ராஜாவின் அந்தரங்கப் பாதுகாவலன் மற்றும் படைத்தளபதி என்றான் அவன், ஓ பாதுகாவலனா ! நீ பார்த்தால் பயந்தாங்கொள்ளி போல் அல்லவா இருக்கின்றாய், என்ற ஞானியின் இந்த பதிலைகேட்ட போர்வீரன் கொதிப்படைந்து உடை வாளை உருவி என்ன சொன்னீர்கள் என்று மிரட்டினான். அவன் விழிகள் விநாடி நேரத்தில் சிவந்துவிட்டன. சாந்தமாக அவனை ஏறிட்டு நோக்கியே தத்துவஞானி இப்போது உன் வினாவின் பதிவிடையை நீ எட்டிவிட்டாய் என்றார். ஞானி என்ன சொல்கிறார் என்று புரிந்துகொள்ள முடியாமல் புருவத்தை உயர்த்தினான் தளபதி, உன் சீற்றமான சினத்தினால் நரகத்தின் வாயிலில் இப்போது நிற்கிறாய் என்றார் ஞானி. வீரன் கோபத்தை தனித்துக்கொண்டான், உருவிய வாளை உறைக்குள் போட்டான்,அமைதியாக ஞானியைப் பார்த்தான்.புன்னகை புரிந்தபடி ஞானி கூறினார், உன் கேள்வியின் மீதி பதிலையும் இப்போது நீ பெற்றுவிட்டாய்,வீணான சினத்தை கட்டுப்படுத்தி வேண்டாத உணர்வுகளை நீக்கி அமைதி அடைந்துள்ள நீ இப்போது சொர்க்கத்தின் வாசலில் நிற்கிறாய். தத்துவ ஞானியின் பதிலால் படைத்தளபதி தெளிவு பெற்றான். நமக்குள்ளேதான் இருக்கின்றன சொர்க்கமும், நரகமும்.
சூடுபறக்கும் தேநீரை ஒரு கோப்பையிலிருந்து மறு கோப்பைக்கு மாற்றி ஆற்றும்போது சூடு குறைகின்றது. அதேபோல்தான் நாமும் நம்மை மீறி கோபம் வரும்போது அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் சென்றாலே போதும் சிலநொடிகள் ஆறஅமர சிந்திக்க ஆரம்பித்தாலே சினத்தால் பிரச்சனைகள் பெரிதாகும் என்கிற தெளிவு பிறக்கும். ஒரு மடத்தில் இரண்டு துறவிகள் இருந்தனர், இளைய துறவி சாந்தமானவர், மூத்த துறவியோ எல்லாம் படித்திருந்தும் எடுத்ததற்கெல்லாம் கோபப்படுவார். சாந்தமான இளைய துறவி மூத்தவரை மாற்ற முயன்றார், ஒரு நாள் அவரிடம் இந்தாருங்கள் இஃது ஒரு மந்திரக்குவளை உங்களுக்குக் கோபம் வரும்போதெல்லாம் இதில் 3 முறை தண்ணீர் எடுத்துப் பருகுங்கள், பிறகு பாருங்கள் உங்களிடம் கோபம் ஒருபோதும் அண்டாது என்றார். மூத்ததுறவியும் அந்தப் பழக்கத்தை மேற்கொண்டார், என்ன வியப்பு மெல்ல,மெல்லக் கோபம் இல்லாதவராக இளைய தறவியை போல அவரும் மாறிவிட்டார். இளையவரை அழைத்து இதயப்பூா்வமாக நன்றியைத் தெரிவித்து, இந்த மந்திரக் குவளையின் சக்தி மகத்தானதாக உள்ளது என்றார். இளையவர் வணங்கினார், என்னை மன்னியுங்கள், தந்தது மந்திரக்குவளை இல்லை, சாதாரணமான ஒன்றுதான், உணர்ச்சி மேலீட்டால் சினம் வரும் போது அறிவுப்பூர்வமாக சிந்திக்க இயலாது. ஆனால் ,சிந்திக்க முடியுமானால் கோபம் தானே குறையும்.3முறை தண்ணீரை ஊற்றிக்குடிக்கும்போது சிறிது நேரம் கிடைக்கிறது. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன, ஆத்திரம் அகன்றது. அதனால்தான் உங்கள் கோபம் நீங்கியதே தவிர குவளையில் ஏதும் மந்திரமோ மாயமோ இல்லை. வினாடி நேரக் கோபத்தால் விளையும் தீமைகள் வாழ்வின் முழு நேரத்தையும் அல்லவா நிர்மூலமாக்கிவிடுகிறது, எனவே சினத்தை தவிர்ப்போம் சிகரம் தொடுவோம்.
ஒருமுறை கோபப்பட்டால் அதை மறப்பதற்கு 6 மாதங்கள் ஆகின்றது எனவே சிந்திப்போம் சினத்தைத் தவிர்ப்போம்.



