நன்றி : சங்கமயுகம்
தாராள மனமுடைய இராஜா நகுவர் ஆந்திர மாநிலத்தில் ஆட்சி
புரிந்து வந்தார். தினமும் இரண்டு பிச்சைக்காரர்கள் அவரிடம் பிச்சை கேட்க, அவர் தினமும் உணவும் பணமும் கொடுப்பார். பிச்சையை பெற்றுக் கொள்ளும் போது, அவர்களில் ஒருவரான முதியவர், ‘இறைவன் கொடுத்தார்’ என்று வழக்கமாகச் சொல்வார். இளையவரான அடுத்தவர் ‘அரசர் கொடுத்தார்’ என்று சொல்வார்.
ஒரு நாள் இராஜா வழக்கத்தை விட அதிக பணம் கொடுத்தார். உடனே மூத்தவர் சத்தமாக, ‘இறைவன் கொடுத்தார்’ என்று கூறினார். இது அரசனுக்கு கோபமூட்டியது. இங்கு நான் கொடுத்துக் கொண்டிருக்க அவர் இறைவன் கொடுத்தார் என்கிறாரே. உண்மையான நன்மை செய்பவர் யார் என்பதை இவருக்கு புரிய வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டார்.
மறுநாள் இராஜா பிச்சை போட்ட பின் பிச்சைக்காரர்கள் இருவரையும் பார்த்து, வழக்கமாக செல்லும் பாதையில் செல்லாமல், அதிகம் பயன்படாத பாதையில் போகச் சொன்னார். அந்த பாதையில் தங்கம் நிறைந்த பை ஒன்றை வைத்திருந்தார். தன்னை புகழும் இளையவர் முதலில் செல்லுமாறு பார்த்துக் கொண்டார். தன்னை ஏன் அந்த பாதையில் போகச் சொல்கிறார்
என்று அந்த பிச்சைக்காரருக்கு கேள்வி எழுந்தது. ஆச்சரியமும் அடைந்தார்.
ஒருவேளை அந்த சாலையின் தனிமையை அனுபவிப்பதற்காக
அனுப்பியிருப்பார் என்று எண்ணிக்கொண்டார். அழகான அந்த பாதையில் கண்ணை மூடிக்கொண்டும் நடக்கலாம் என்று கண்ணை மூடிக்கொண்டு நடந்தார். எனவே அந்த பையை பார்க்க வில்லை. பின்னால் வந்த முதிய பிச்சைக்காரர் அந்த பையை எடுத்துக் கொண்டார்.
மறுநாள் இராஜா ‘ஏதாவது ஒன்றை பாதையில் பார்த்தீர்களா?’ என்று பிச்சைக்காரர்களைப் பார்த்து கேட்டார். ‘பாதை அழகாக இருந்தது, நான் வேறு எதையும் பார்க்கவில்லை’ என்று இளைய பிச்சைக்காரர் கூறினார்.
அடுத்தவர், ‘நான் பார்த்தேன். ஒரு தோல் பையில் தங்கம் இருப்பதைப் பார்த்தேன். “இறைவன் கொடுத்தார்” என்று கூறினார்.

உண்மையில் தான் தான் நன்மை செய்பவர் என்று தீர்மானம் செய்து கொண்டு, அதை எப்படியும் முதிய பிச்சைக் காரருக்கு புரிய வைக்க வேண்டும் என்று இராஜா நினைத்தார். இளைய பிச்சைக் காரருக்கு பூசணிக்காய் ஒன்றைக் கொடுத்தார். அந்த பூசணிக்காயில் துளையிடப்பட்டு வெள்ளிக் காசுகள் நிறைக்கப் பட்டிருந்தது. ஆனால் அது அந்த பிச்சைக்காரருக்கு தெரியாது. எனவே போகும் வழியில் ஒரு வியாபாரியிடம் சில காசுகளுக்கு விற்று விடுகிறார்.
மறுநாள் இராஜா இருவரிடமும், நேற்று ஏதாவது முக்கிய சம்பவம்
நடந்ததா என்று இளையவரை அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டே
கேட்டார். அதற்கு அவர் ‘நீங்கள் கொடுத்த பூசணிக்காயை சில காசுகளுக்கு விற்று சம்பாதித்தேன், உங்களுக்கு பெரிய மனசு’ என்றார்.
இராஜா கஷ்டப்பட்டு தனது உணர்வுகளை காட்டிக் கொள்ளாமல் ‘நீ?’ என்று இன்னொரு பிச்சைக்காரரைப் பார்த்து கேட்டார். அதற்கு அவர் ‘ நான் சென்று கொண்டிருக்கையில் வியாபாரி ஒருவர் பூசணிக்காய் ஒன்றைக் கொடுத்தார். வீட்டிற்கு சென்று பார்த்த போது அதன் நடுவே வெள்ளிக் காசுகள் இருந்தன. “இறைவன் கொடுத்தார்”, என்று கூறினார்.
இந்த கதை மூலம் நாம் தெரிந்து கொள்ளும் பாடம் என்ன? நம்முடையது என்று எதுவும் இல்லை. யாருக்கு யார் மூலம் என்ன கொடுக்க வேண்டுமோ அதை உரிய நேரத்தில் இறைவன் கொடுப்பார். ஆனால் இறைவன் துணையுடன் நாம் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.

