Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

கொடுப்பது என்றால் பெறுவது

Thursday, 13 February 2020 / Published in Article – By story

கொடுப்பது என்றால் பெறுவது

பி .கு உஷா ராணி, மதுரை

நன்றி: Purity Magazine

பூலோக வாழ்க்கையில் வெறுப்படைந்து, விரக்தியடைந்த ஒருவன் கடல் பயணம் மேற்கொண்டான். குறிக்கோளில்லாமலேயே புறப்பட்டதால் படகில் தேவையான பொருட்களோ, வரைபடமோ, திசைகாட்டும் கருவியோ எடுத்துச் செல்லவில்லை. படகு வேகமாக சென்று கொண்டிருந்தது. கடற்கரையும் கண்களிலிருந்து மறைந்து விட்டது. நாலா பக்கமும் நீர்ப்பரப்பைத் தவிர வேறொன்றுமே இல்லை. இருளும் வெளிச்சமும் மாறி மாறி வந்தன. திக்குத் தெரியாத நடுக்கடலில் நாட்கள் பல கழிந்துவிட்டன. இப்போது அவனுக்கு துணையாக இருந்தது படகும். படகில் மிஞ்சி இருந்த சிறிது உணவுப் பொருட்கள் மட்டுமே.

அப்போது அவன் மனதில் இனம் புரியாத சோகம் குடி கொண்டது. தனிமை அவனை வாட்டியது. கடந்த கால வாழ்க்கை நினைவுகள் மனதில் எழுந்தன. எத்திசையில் செல்ல வேண்டுமென்று தெரியாமலே மேலும் சில நாட்கள் கழிந்து விட்டன. அவனிடம் மிஞ்சி இருந்த உணவு இன்னும் ஒரு நாளைக்குத் தான் போதுமானதாக இருந்தது. அதாவது மூன்று வேளைக்குப் போதுமான ரொட்டித் துண்டுகள் தான் இருந்தன. பசியாக இருந்தாலும் ரொட்டித் துண்டுகளைத் தொட மனம் வரவில்லை. தீர்ந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம். மீண்டும் கடந்த கால நினைவுகள் எழுந்தன. நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லையே! யாருக்கும் கெட்டவனாக நடக்கவில்லை…. நல்லதும் செய்யவில்லை, கெட்டதும் செய்யவில்லை. இவ்வாறு பல எண்ணங்கள் மனதில் தோன்றி மறைந்தன. திடீரென்று எதிர்பாராத எண்ணம் பளிச்சிட்டது. என் உணவுக்காக எத்தனையோ பிராணிகள் சாக நேரிட்டதே! எவ்வளவு கொடுமை! நான் பாவம் செய்துவிட்டேன் என்று அவன் மனம் வருந்தியது. எங்கிருந்து வந்தது இப்போது இந்த கருணை. நான் நரகத்துக்குத் தான் போவேன் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

இத்தனை நாள் வீணாக சுற்றித் திரிந்தும், சுயநலத்துடன் வாழ்ந்ததும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வரத் தொடங்கின. கொஞ்சம் கூட பொறுப்பும் கருணையும் இல்லாமல் வாழ்ந்ததாக நினைத்தான். தனக்கு நரகம் உறுதி என்பதில் இப்போது அவனுக்கு சந்தேகமே இருக்கவில்லை.

இப்போது மட்டுமென்ன! சொர்க்கத்திலா வாழ்கிறேன். அலைக்கழிக்கும் அலைகளும், கொட்டும் மழையும், சூறாவளியும், கடுங்குளிரும் நான் அனுபவிக்கும் தண்டனை தானே. இதைவிட நரகம் வேறென்ன இருக்க முடியும் என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டான். தன் வாழ் நாட்களில் எத்தனையோ நல்ல காரியங்கள் செய்திருக்கலாம். செய்யாமல் விட்டு விட்டோமே என வருந்தினான். இவ்வாறு தன் மீதே அவனுக்கு வெறுப்பு உண்டானது. இன்னும் சில மணி நேரங்களோ அல்லது மிஞ்சிப் போனால் ஓரிரு நாட்களோ தான் உயிரோடு இருக்கப் போகிறேன். நடப்பது நடக்கட்டும் என்று எண்ணியவனாக சோர்ந்து போய் தூங்கிவிட்டான்.

அப்போது அவன் ஒரு கனவு கண்டான். கனவில் ஒரு கிழவி தோன்றினாள். பார்த்த முகமாக இருந்தது. எங்கே பார்த்தேன்? ஞாபகப்படுத்திப் பார்த்தான். ஒரு நாள் அந்த கிழவி பசியோடு இருந்த போது சில ரொட்டித் துண்டுகளைக் கொடுத்தது நினைவிற்கு வந்தது. கனவில் கிழவி அவனுக்கு நன்றி கூறிவிட்டு படகை இந்த திசையை நோக்கிச் செலுத்து என்று ஒரு திசையை காட்டிவிட்டு மறைந்து விட்டாள். அக்கிழவி காட்டிய திசையை நோக்கி படகைச் செலுத்தினான். என்ன ஆச்சரியம்! வெகு விரைவிலேயே நிலப் பரப்பு தென்பட்டது. விரைந்து சென்று பூமியைத் தொட்டான். அளவில்லா மகிழ்ச்சி அவனை ஆட்கொண்டது. தன் வாழ்நாளில் செய்த ஒரே ஒரு நல்ல காரியம் தனக்கு உதவியது என்று எண்ணினான். இறைவனுக்கு நன்றி கூறினான். மனம் பூரிப்படைந்தது. வாழ்க்கை என்றால் உதவுவது, அன்பு செலுத்துவது. கொடுப்பது என்றால் பெறுவது என்பதை இப்போது புரிந்து கொண்டான். இப்போது அவன் புது மனிதன். இந்த உலகின் மீது இப்போது அவனுக்கு வெறுப்பு இல்லை. அவன் வாழவேண்டும் என்று விரும்புகின்றான். ஏனெனில் எப்படி வாழ வேண்டும் என்பதை நன்றாக புரிந்து கொண்டான். பழைய மனிதன் இறந்து விட்டான். இப்போது அவன் புது மனிதன்.

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP