Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

மறதி விளையாட்டு

Tuesday, 19 April 2016 / Published in Article – List

மறதி விளையாட்டு

பி.கு. செண்பகராஜ், மதுரை

rubthumb_madurai_bk

 மனித வாழ்க்கையில் மறதி என்பது தேவையா? அல்லது தேவையில்லையா? நமது நினைவுகள் அவசியமான காரியத்திற்கு உதவாத நிலைக்கு பெயர் தான் மறதி. சரியான நேரத்தில் சரியான காரியங்கள் முடிக்கப்படுவதற்கு நினைவு ஒன்று தான் வழி என்று நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். மறதியாலும் கூட காரியம் முடியலாம். எது சரி? நினைவு மற்றும் மறதி என்பது மனம் சம்பந்தப்பட்டது. கடந்த காலத்தில் பிடிக்காத விசயங்களை நினைக்கும் பொழுது பல கசப்பான அனுபவம் ஏற்படுகின்றது எனில் மறப்பது நல்லவை அல்லவா? அல்லது பிடித்த விசயங்களை மறந்து விட்டால் அதே மறதி தீயதாகின்றது. மறதி வியாதியா அல்லது மறதி ஒரு குணமா? மறதி ஒரு தீய குணம் என்று எங்கும் சொல்லவில்லை, மறந்தது நமது குற்றமே ஒழிய மறதி என்பது குற்றமானது அல்ல. நாம் ஒரு பொருளை போகும் வழியில் கொடுக்க மறந்ததால், பல வேலைகளை முடித்துவிட்டு திரும்பி வரும் பொழுது கொடுத்துவிட்டாலும், இதற்கிடையில் பொருளைக் கொடுக்கவில்லை என்ற எண்ணம் பல முறை நம் மனதில் ஒரு இனம் தெரியாத கணத்தை ஏற்படுத்தியிருக்கும். அதனால் ஏற்பட்ட விளைவுகள் ஏராளம். ஆனால் அதற்கு மறதி குற்றமல்ல, மறந்தது தான் குற்றம். உண்மையில் மறதி என்பது மிகவும் நல்ல குணம்.

நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது

அன்றே மறப்பது நன்று – திருக்குறள்

தீயதை அன்றைக்கே மறப்பது நல்லது, என்கிறார் திருவள்ளுவர். ஏன் அந்த கணமே மறப்பது அதைவிட நல்லதே. ஆனால் மறதியினால் அனேக பிரச்சனைகளை நாம் எதிர்கொள்வதாக நினைத்து வருகின்றோம். அதாவது செய்யப்படவேண்டிய வேலை நின்று விடுகின்றது. எத்தனையோ விபத்துக்கள் கூட சில மறதியினால் தான் வருகின்றது. இரயில் பயணம் மேற்கொள்ள 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்தும் பயணத்திற்கு கிளம்பும் இறுதி தருணத்தில் பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு செல்லவில்லை எனில் பல பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியது வருகின்றது. இருசக்கர வாகனத்தில் சொல்லும் பொழுது வரும் அலைபேசி அழைப்பை எடுத்துப் பேசிவிட்டு, சிறிது நேரம் கழித்து யாரோ பேசினார்களே, என்ன பேசினார்கள், என்று மூளையை கசக்குவதும் உண்டு. இப்படி விசயங்கள் ஏராளம்.

Red bow on finger isolated on white background

சிலர் வயதாகிவிட்டாலே மறதியும் கூடவே வந்துவிடும் என்று மனதை தேற்றிக் கொள்கின்றனர். உடலின் வயதிற்கும் மறதிக்கும் என்ன சம்பந்தம்? மறதி நம் மனம் சம்பந்தமானது. பள்ளியில் படிக்கும் மாணவர்களிலிருந்து பழுத்த பாட்டி வரைக்கும் மறதி உள்ளது. சிறு மாணவ வயது பல வினோதங்களைப் பார்த்து ஆச்சரியப்படும் வயதாகும். அதை அறியாது, பெரியவர்கள் அந்தப் பிஞ்சிடம், படிப்பைப் பற்றி ஏதாவது கேள்வியைக் கேட்டுவிட்டு, இவனுக்கு மறதி அதிகமாக உள்ளது என்று பட்டத்தை அங்கேயே சூட்டிவிடுகின்றனர். அதற்கு அப்புறம் தான் அந்த மாணவனுக்கே மறதி என்பதன் உருவம் இதுவென்று தவறாகத் தெரியவருகின்றது.. இந்த மறதியைப் பற்றி தவறுதலாக தன் பெற்றோர் தன்னிடம் கூறினார்கள் என்பதைக் கூட மறந்து தன் குழந்தையிடமும் அதே தவற்றை கூறிவிடுகின்றார்கள். இதை எங்கே போய் சொல்வது? இப்படி குழந்தையிலிருந்தே நம்மை இந்த உலகம் எத்தனையோ விசயங்களில் அடிமையாக்கியுள்ளது !

கண் முன் விரியும் நிகழ்வுகளே உண்மை.

எத்தனையோ கடந்த கால கவலைகளிலும், வருங்கால வருத்தமான சிந்தனைகளிலும் நாம் வாழ்கின்றோம். இன்று எதை மறப்பது எதை நினைப்பது என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மேலாளர் கூட்டத்தில், ஒரு விரிவுரையாளர் இந்த கேள்வியை பற்றி, ஆலோசனைப்பட்டறை ஒன்றில் ஆலோசித்ததைப்பற்றிக் கூறிக்கொண்டிருந்தார். அதில் மறக்கவேண்டியதை மறக்கவேண்டும், நினைக்கவேண்டியதை நினைக்கவேண்டும் என்று அந்த வாதத்தில் ஏகபட்சமான முடிவாகி இருந்தது எனவும், ஆனால் அதில் ஒருவரின் கருத்து மட்டும் மிக வித்தியாசமாக இருந்தது எனவும், அவரின் அந்த ஒரு கருத்தே சரியென அனைவரும் ஏற்றுக்கொண்டனர் எனவும் கூறினார். அந்தக் கருத்து என்ன தெரியுமா? என்று கேட்ட அவர் அந்தக் கருத்தைக் கூற தயக்கம் காட்டினார், ஏனெனில் அதை மறந்துவிட்டேன் என்றார். பிறகு சிறிது கால அவகாசம் தாருங்கள் என்று வழிந்தார். மேலும் உங்களுக்கு அந்தக் கருத்தைக் கூறும் காலம் இன்னும் வரவில்லை போலும் என்றும் தயக்கத்துடன் கூறினார். அமர்ந்திருந்த அனைவரும் பதிலை அறியாமல், எப்படி விடுவது என்று பல வினாக்களை அவர் மீது அள்ளி வீசினார்கள். இந்த பதிலை கேட்க ஆர்வமாக இருக்கும் உங்களுக்கு, அந்தப் பதில் கிடைக்கவேண்டும் என்றால் கட்டாயம் கிடைக்கும் என்று மழுப்பல் பதிலைக் கேட்டு அனேகபேர் மிகவும் கோபம் அடைந்தனர். அதில் ஒருவர் இவர் இப்படியேதான் மழுப்புவார் என நினைத்து எரிச்சலில் தன்னிடம் இருந்த பொருளால் அவரை தாக்க முனைந்துவிட்டார். அந்தத் தருணத்தில், ஒரு பயத்தில், அதிர்ச்சியில் அவர் மனம் மறதியைச் சரிசெய்து விட்டது எனவே எனக்கு நினைவு வந்துவிட்டது (மறதி தெளிந்துவிட்டது) என்று உரக்ககூறியதால், அடிக்கவந்தவர் அவரை விட்டுவிட்டார். பிறகு அனைவரும் அமைதிகாத்தனர். present_past_madurai_bkஅவரும் கூறலானார். நிகழ்காலத்தில் உங்கள் முன் வரும் நிகழ்ச்சியை நாம் மறக்கும் சூழ்நிலையே வருவதில்லை, நினைவிற் கொள்ளவேண்டும் என்றும் முயற்சிப்பதில்லை ஏனெனில் அது உங்கள் முன் நடந்து கொண்டிருக்கின்றது.. அப்படியெனில் மறக்கவேண்டியது எது? நினைக்கவேண்டியது எது? எதுவுமில்லை. கடந்தது திரும்ப வருவதில்லை. வருங்காலம் நம் கைகளில் இல்லை. இந்த நொடிப்பொழுதில் என்ன நடக்கின்றதோ அதுவே நிச்சயம், மற்றவை எதுவும் உறுதியில்லை. எனவே இப்பொழுது எதைச் செய்யவேண்டுமோ அதையே நினையுங்கள். அதுவே நிரந்தரம். இதை மறந்துவிட்டேன், இதை நினைத்துவிட்டேன் என்று நிகழ்காலத்தில் எதுவுமில்லை. நடப்பதை நினைத்துத் தானே ஆகவேண்டும். அதற்காக மற்றொன்றை மறந்து தானே ஆகவேண்டும். இதில் மறப்பதற்கு என்ன இருக்கின்றது, நினைப்பதற்கு என்ன இருக்கின்றது? இப்பொழுது சொல்லுங்கள், எது சரி? என்று தனக்கு நினைவு வந்ததைக் கூறினார்.

Memory2_madurai_bkநினைக்கத் தெரிந்து மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? என்ற பழைய பாடல் வரிகள் அனைவருக்கும் நினைவிருக்கும். மறக்க முடியாததால் வரும் பிரச்சனையைத் தான் அந்தப் பாடல் நினைவு கூறுகின்றது. நினைவு தான் வாழ்க்கை என்பது நமக்குத் தெரிந்தது. ஆனால், நினைவிற்குப் பின் மறதி இருப்பது சத்தியம். சில நேரங்களில் மறதி அவசியம்.

மறதி என்று ஒன்று மனித வாழ்க்கையில் இல்லை எனில் மனிதன் மனிதனாக இருக்கமாட்டான், ஏன் மிருகமென்று சொல்ல கூட தகுதியற்றவராக ஆகிவிடுவான்.

வாழ்க்கையில் மறதி ஒரு மாமருந்து.

மறதி வாழ்க்கையில் நல்விருந்து.

தினம் தினம் மறக்கும் மருந்து ஒவ்வொருவருக்குள்ளும் இயற்கையாக இருக்கின்றது. இது இறைவன் தந்த வரம் என்று சொல்லலாம். முந்தைய ஜென்மத்தைப் பற்றி யாருக்கேனும் நினைவு வந்துவிட்டால் எத்தனை பேருக்கு தொல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். மறதி வாழ்க்கையின் நியதி. ஒன்றை மறக்கவில்லை எனில் உங்களையே நீங்கள் மன்னிக்கவில்லை என்று அர்த்தம். ஆகையால் மறந்துவிடு மன்னித்துவிடு (Forget-Forgive)என்று தனக்கு கூறிக்கொள்ளலாம். ஆனால் மற்றவர்களை மன்னித்தால் தான் அவரின் விசயங்கள் நம் மனதிலிருந்து மறந்து போகும் (Forgive-Forget). மற்றவர்களில் விசயங்களை மனதில் வைத்தால் அது மிகப்பெரிய மலையாகிவிடும். அதைத் தகர்க்க வேறு தடியை நாடவேண்டியது வந்துவிடும். அதற்கு மற்றவர்களின் விசயத்தை மறக்க மனதிற்குக் கற்றுக்கொடுப்பது நல்லது.

மறதி மருத்துவம்Forgetmedicine_madurai_bk

ஒரு மருத்துவர் எந்த மருந்தும் கொடுப்பதில்லை, பதிலாக அவர் முன் இருந்தாலே போதும் எந்த வியாதியும் இருக்காதாம், இதுவே அந்த மருத்துவருக்கான அட்வர்டைஸ்மெண்ட். பலரும் அவரிடம் சென்று மருத்துவம் எடுத்துக்கொண்டனர். ஆனால் பிரச்சனையாதெனில் அவர் முன் இருக்கும் போது மட்டும் தான் வியாதி சரியாகின்றது, வெளியில் சென்று விட்டால் மீண்டும் வந்துவிடுகிறதாம். பிறகு இரண்டாவது முறை செல்லும் போதுதான் அவர் அந்த சிகிச்கையின் உண்மையைப் புரியவைக்கின்றார். அது என்ன தெரியுமா? அது தான் மறதி மருந்து. முதல் முறை, வரும் நோயாளிகளிடம் பல விசயங்களைப் பேசி அவர்களிடம் உள்ள வியாதியை மறக்கடிக்கச் செய்கின்றார்.. அதனால் அந்த நோயின் தாக்கம் குறைந்துவிடுகின்றது. பிறகு வெளியில் சென்று மீண்டும் அந்த வியாதியைப்பற்றி சிந்திக்கும் போது அந்த நோய் தொற்றிக்கொள்கின்றது. இரண்டாவது மீண்டும் செல்லும் போது இந்த மறதி மருந்தின் டெக்னிக்கைப் புரியவைக்கின்றார். உண்மையில் மறதி என்பது சிறந்த மருந்து தான். ஒன்று இருப்பதாக நினைத்தால், இல்லை என்றாலும் அது இருக்கும், இல்லை என்று நினைத்தால், இருந்தாலும் அது இருக்காது. மறதி மருந்து ஏதுவென்று புரிகின்றதா?

மறதி மகத்தான சாதனம்Sadanam_madurai_bk

இப்படித்தான் ஒருவர் அனைவரின் வற்புறுத்துதளால் தன்னை மருத்துவ ஸ்கேன் எடுக்கச் சம்மதித்தார். அதில் அவருக்குக் கட்டி இருப்பதாகத் தெரியவந்தது. அது வரை எந்த வலியும் இல்லாதிருந்த அவருக்கு, இந்தச் செய்தி தெரிந்த அடுத்த கணத்திலிருந்து ஏதோ வலியிருப்பதாக உணர ஆரம்பித்துவிட்டார். இப்பொழுது சொல்லுங்கள் வலி நினைவில் இருக்கின்றதா அல்லது மறதியில் இருக்கின்றதா? பெரிய அணுகுண்டே உங்கள் அருகில் இருந்தாலும் உங்களுக்கு அது தெரியாத வரை எந்தப் பிரச்சனையுமில்லை. அதை அறிந்தவர்கள் சுயநலம் கருதி யாரிடமும் சொல்லாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி அவசரத்தில் கீழே விழுந்து இறந்தவர்கள் ஏராளம். மறதி உங்களைப் பாதுகாக்கும் மகத்தான சாதனம்.

மறக்கப் பழகு

அதற்காக அவசியமானதை மறந்தால் என்னவாகும் என்று தானே உங்கள் மனதில் இப்பொழுது கேள்விகள் வருகின்றன? நினைவாற்றல் என்பது ஒரு கலை. அவசியமான நேரத்தில் அவசியமானதை நினைவிற்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். அவ்வளவு தான், வேலை முடிந்தது ! நினைவின் சுமைதான் தவறே தவிர நினைவில் கொள்ளவேண்டாம் (மறதி) என்று அர்த்தமல்ல. ஒரே நேரத்தில் 16 விசயங்களை நினைவில் வைத்துக் கொள்ளும் கலைஞர்கள் எத்தனையோ பேர் தமிழகத்தில் உள்ளனர். உண்மையில் எவ்வளவு அவர்கள் நினைவில் வைத்துக்கொள்கின்றார்களோ அவ்வளவு அவர்கள் மறக்கவேண்டியது வரும். இது தான் மனதின் ஆற்றல். உங்களுக்கு அவசியமானது நினைவில் வரவில்லை எனில் மறக்கப் பழகவில்லை என்று அர்த்தம். மறக்க யாரேனும் பழகுவார்களா? ஏன் கூடாது. நினைத்துப் பழகும் நாம் ஏன் மறக்கப் பழகக் கூடாது? அப்பொழுது நினைவு தானாக வருமே! ஆலோசகர்கள் (கௌன்சிலிங் செய்பவர்கள்) அனேக பேர்களின் விசயங்களைக் கேட்பார்கள், அந்த விசயங்களை அவர்கள் தன் மனதில் வைத்திருந்தால் அவருக்கு வேறு யாராவது கௌன்சிலிங் செய்யவேண்டியது வந்துவிடும். எனவே அவர்கள் துடைத்தல் என்ற யுக்தியை கையாளுவார்கள். அப்பொழுது தான் அவர்கள் பிழைத்தார்கள், மேலும் பலபேருக்கு ஆலோசனை வழங்க முடியும். இதற்குப் பெயர் தான் மறதி வைத்தியம் நினைவாற்றலை வளர்க்கப் பழகுகின்றார்கள், உண்மையில் எண்ணங்களால் ஆனது தான் வாழ்க்கை எனில் நினைக்கப்பழக வேண்டியது இல்லை. அது தானாக வரும். மறக்கத்தான் இப்பொழுது பழக வேண்டும்.

மறதி ஆற்றல்

மனதின் அதிபெரும் சக்தியை அறிந்து கொள்ளுங்கள். மனித ஆற்றலால் உருவான அதிபெரும் கணனியால், அனேக செய்திகளை உடனே புள்ளிவிவரத்துடன் ஞாபகப்படுத்தமுடிகின்றது. எனில் மனித சக்தியால் முடியாதா? புள்ளிவிபரம் தரும் இடத்தில் மனித சக்தி படத்துடன் கூடிய காட்சிகளையும் அல்லவா தருகின்றது ! மறதிக்காகவும் நினைவிற்காகவும் மலைக்கவேண்டியது இல்லை. மனதின் மிகப்பெரிய ஆற்றல்களில் ஒன்று மறதி.

மனதை…

வீண் நினைவால் பகுத்துவிடாதீர்கள்,

மறதியால் பக்குவப்படுத்துங்கள்,

உருப்படியில்லா நினைவால் உடைத்துவிடாதீர்கள்.

மறதியால் உருப்படியாக்குங்கள்.

தேவையற்ற நினைவால் திகைக்கவிடாதீர்கள்,

மறதியால் தீர்க்கமாக்குங்கள்.

தீர்க்கமற்ற நினைவால் திண்டாடவிடாதீர்கள்,

மறதியால் திண்மையாக்குங்கள்.

கடுமையான நினைவால் களைக்கவிடாதீர்கள்,

மறதியால் கலைஞனாக்குங்கள்.

அளவற்ற நினைவால் அழுத்திவிடாதீர்கள்,

மறதியால் ஆறுதல் கூறுங்கள்

கடுமையான நினைவால் மனதை கணக்கவிடாதீர்கள்:

மறந்து மானம் காத்திடுங்கள்..

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP