Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

வாழ்க்கை ஒரு மாரத்தான் விளையாட்டு

Tuesday, 29 September 2020 / Published in Article – List

வாழ்க்கை ஒரு மாரத்தான் விளையாட்டு

-பிரம்மா குமாரர். செண்பகராஜ், மதுரை

          வாழ்க்கை ஒரு விளையாட்டு. விளையாட்டில் பொதுவாக மகிழ்ச்சியிருக்கும், பல விசயங்களை மறப்பதால் குஷியிருக்கும், வெற்றித் தோல்வியைச் சகஜமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவமிருக்கும், விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை இருக்கும், உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்தின் இரகசியமும் பொதிந்திருக்கும், சிந்தனை சக்தி தெளிவுபெறும், விளையாட்டில் இலயித்து இருப்பதால் மனம் அமைதியில் திலைத்திருக்கும்.

மாரத்தான் என்ற ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் வாழ்க்கையின் பல நிலைகளைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. பல பிரச்சனைகளைத் தாண்டி வாழ்க்கைப்பாதையில் நாம் பயணிக்கும் விதத்தை விளக்குகிறது. வாழ்க்கையில் நிற்காமல் தொடர்ந்து வாழ்ந்து கொண்டேயிரு! என்ற தத்துவத்தை அது         வலியுறுத்துகிறது.

உடலின் ஒவ்வொரு உறுப்பின் வலிமையின் ஆதாரத்தில் நாம் இந்த வாழ்க்கை என்ற மாரத்தான் ஓட்டப்பந்தையத்தை மேற்கொள்கிறோம். இதன் பின்புலத்தில் மனவலிமையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தால் தான் இந்த வாழ்க்கைப் பந்தயத்தில் வெற்றியைப் பெறமுடியும். வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டமும் மிகவும் உன்னதமானதாகும். அதை இரசிக்கப்பழகிவிட்டால் உண்மையில் வாழ்க்கை என்பது ஓர் வினோதமான நீண்டதூர ஓட்டப்பந்தய (மாரத்தான்) விளையாட்டுதான்! குழந்தைப் பருவம் வாழ்க்கையில் அனைவருக்கும் மிக ஆரோக்கியமான, எளிதான மற்றும் ஆரம்பப் பயணமாகும். அந்த ஓட்டத்தில்

நமது வளர்ச்சி, வேகம் மற்றும் துடிப்பு அனைத்தும் மிகவும் அதிகமாகத்தான் இருக்கும். மாணவப்பருவம் ஒரு இனிமையான, இதமான மற்றும் கவலையற்றப் பயணமாகும். இதில் குழந்தைத்தனம் கலந்திருப்பதால் நமது ஓட்டம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். இது அறியாப்பருவம், அறிந்து கொள்ளத் துடிக்கும் பருவம். இளமைப்பருவமோ எதையும் சாதிக்கவல்ல சக்திசாலியானப் பருவம். இப்பருவம் வரை நமது வாழ்க்கை என்ற ஓட்டம் சற்று அளவுகடந்த வலிமையுடன் தான் இருக்கும். தனக்கென்று ஒரு தனித்துவம், தனிஅடையாளம் மற்றும் தனக்கென்று ஒரு வகையைப் பிரித்துக் கொண்டு பயணித்துக் கொண்டு இருப்பார்கள். அதில் அவர்களே இராஜா என்பதிலும் ஐயமிருக்காது. அதற்கு நிகர் வேறு எதுவும் இருப்பதாகத் தோன்றாது.

இதற்கு பிறகு தான் உடல் பலம் மட்டுமன்றி மன பலம் சிறிது தளர்வுப் பாதைக்கு பயணிக்கத் துவங்கும்.  இந்த ஓட்டத்தில் நம்மால் தொடர்ந்து இலக்கை அடைய முடியுமா, முடியாதா என்ற கேள்விகள், ஆச்சரிய குறிகள் தென்பட ஆரம்பிக்கும். சிலர் தனது வாழ்க்கை ஓட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று கூட நினைத்துவிடுவார்கள். அதாவது தற்கொலை முயற்சி எல்லாம் நடந்தேறுகின்றது.

பாதியைக் கடந்து, தொடர்ந்து ஓடி முன்னேறுபவருக்கே வெற்றி வாய்ப்பு இருக்கும். வாழ்க்கை என்ற மாரத்தானில் முதலில் வந்து முடித்தால் தான் வெற்றி என்றல்ல, ஒவ்வொருவருக்கும் ஒரு காலஅவகாசம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும், இதில் இறுதி வரை ஓடிக்கொண்டேயிருந்தாலே வெற்றி தான். முதலிலோ இடையிலோ அல்லது இறுதி வரையோ தனது ஓட்டத்தை எடுத்துச் செல்வது அவரவர் கைகளில் தான் உள்ளது. இங்கு அனைத்தும் மனம் சம்பந்தப்பட்டதாகும். தன் வழித்துணையாக வந்தவர்கள் சிலர் ஓட்டத்தை முடித்துக் கொள்ளலாம், அவர்களைக் கண்டு தனது ஓட்டத்தை முடித்துக் கொள்ளமுடியாது. அவர்கள் வீழவில்லை, விதையாக விதைந்து, உங்களுக்கு இடமிட்டு, அடுத்த வேறு வேடம் ஏற்று, உங்களுடன் தான் முன்னேற்றப் பதையில் ஓடுகின்றார்கள். நீங்கள் முன்னேறுவதுதான் இங்கு பாக்கியுள்ளது.

வாழ்க்கை பயணத்திலும் ஓட்டப்பந்தயம் போல் பாதிக்கு மேல் ஓடுவது என்பது சிறிது கடினமாகத்தான் இருக்கும். அதையும் தாக்குப்பிடித்து ஓடிவிட்டால் முன்னேறிச் செல்லலாம். அதற்காக சிறிது சக்திகளைக் கொடுக்கும் பதார்த்தங்களைச் சுவைத்துக் கொண்டே ஓடுவதுபோல், பழைய உன்னத நினைவுகளை மனதில் சுவைத்துக்கொண்டே கஷ்டங்களை காணடிக்கலாம். தன்னை மறந்து, வரும் களைப்பின் இரணங்களை மறக்கடிக்கலாம். தனக்குமுன் வெற்றிகரமாக ஓடியவர்களின் அனுபவங்களால் தன்னை அரவணைத்துக் கொள்ளலாம், வாழ்க்கையில் ஏற்படும் சில கறைகளில் தன்னைக் கரைத்துக்கொள்ளாமல், கடந்து செல்ல நல்ல ஆன்மீக சிந்தனையை மனதிற் கொள்ளலாம்.

இது நாள் வரை மற்றவர்களை பார்க்காத நாம் மற்றவர்களை பார்க்க ஆரம்பிப்போம். தன்னோடு மற்றவர்களை ஒப்பிட ஆரம்பிப்போம். இது வாழ்க்கைப் பயணத்தில் பெரிதளவில் தளர்வு ஏற்படக் காரணமாகின்றது. கண்ண மூடிக்கிட்டு ஓடு என்று கேலியாகக் கூறுவார்கள். யாரையும் பார்க்காமல் ஓடு என்று இதற்கு அர்த்தம். பார்த்தால் உனது பாதை தடம் புரண்டுவிடும். பொதுவாக கண்களை முடி ஓடினால் தலைச் சுற்றல் வரும், அதாவது விழிப்பு நிலையில் ஓடவேண்டும் இல்லையேல் வியப்பாய் வீழ்வதைத் தவிர வேறு வழியில்லை. வாயை மூடி ஓடினால் சக்தி விரையமாகாது, வாழ்க்கைப் பந்தையத்தில் வாயைக் கட்டுப்படுத்தாதவர் வம்புச் சண்டையிட்டு வாய்ப்பைத் தவறவிடுவது உறுதி. விரையமாகும் காற்று உள்சக்தியாக வேலை செய்யும் பொழுது அது காற்று போல் உங்களைக் கடந்து செல்ல உறுதுணை புரியும். சிலர் வழித்தூரம் தெரியக்கூடாது என்று கருதிக் கொண்டு கீழேப் பார்த்துக்கொண்டேச் செல்வார்கள், அதாவது தன்னை மட்:டும் பார்த்துக் கொண்டுச் சுயநல வாழ்க்கை வாழ்வார்கள். அதற்கு பதிலாக மேலே இறைவனைப் பார்த்துக்கொண்டு பொதுநலத்துடன் பந்தயத்தைக் கடப்பவன் பொதுமக்களால் போற்றிப்பாடப்படுவான்.

பிறகு, சிலருக்கு ஓட்டத்தில் மற்றவர்களைப் பார்க்கும் பழக்கம் இருக்கும். பின்னே செல்பவர்களைப் பார்த்தால் அபிமானம், சோம்பேறித்தனம் மற்றும் தற்பொருமை என்பதல்லாம் தொற்றிக்கொள்ளும், இது நம்மை பின்னடைவிற்கு தான் கொண்டு செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. முன்னே செல்பவர்களைப் பார்த்தாலும் பொறாமை, தைரியமின்மை மற்றும் அவநம்பிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது, இது நம்முள் மேலும் தளர்வையே ஏற்படுத்தும். நாம் நாமாக நமது ஓடுபாதையில் ஓடினால் தான், நாம் நாமாக இருப்போம். இல்லையேல்  மனித நிலை, மிருக நிலையை எடுக்கும் அவலநிலைக் கூட அறங்கேறிவிடுகின்றது. 40 வயதாகிவிட்டால் நாய்குணம் என்று இதைத்தான் கூறுகின்றார்கள். சில இடங்களில் மற்றவர்களை பழிப்பது, அவமதிப்பது மற்றும் கொலை கொள்ளை கூட நடந்துவிடுகின்றது. இதற்கெல்லாம் காரணம் மற்றவர்களைப் பார்க்கும் தூரப்பார்வையேயாகும். இங்கு தன்னை உணர்த்தும் கிட்டப்பார்வை ஒன்றே நம்மைக் காக்கவல்லது. இந்தக் காலகட்டத்தில் தான் நமது இளமைப்பருவத்தின் வளமான, வசதியான நிலையின் மதிப்பு நமக்கு புரிய ஆரம்பிக்கும்.

சிலர் தன்னிலை இழப்பதனால் ஓட்டத்தில் கேலிக்கையாகப் பேசிக்கொள்வதும்., தனது விழிப்புணர்வைத் தவறுவதால், பலருடன் மோதிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இதனால் தனக்கும் மற்றவர்களுக்கும் எந்த இலாபமும் இருக்காது. வரும் மோதலுக்கானத்தருணங்களில் ஆறு போல் வளைந்து கொடுத்து தன்னையும் காத்து மற்றவர்களுக்கும் இலாபத்தை ஏற்படுத்தப் பழகிக்கொள்வதே இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கின்றோம் என்று அர்த்தம். நிற்பது அல்ல வாழ்க்கை, நில்லாமல் நிலைத்து ஓடிக்கொண்டேயிருப்பது தான் வாழ்க்கை. வாழ்க்கையில் எத்தனையே இன்னல்களும் இகழ்ச்சியும் நம்மை அச்சுறுத்தும் வகையில் வரலாம், சிறிது காலம் கடந்து பார்த்தோமேயானால், எந்த அச்சுருத்தலும் நமக்கு பெரிதாகத் தோன்றாது. இறந்தவைபோன்றுத் தோன்றும். எனவே விசயங்களையும் விமர்சனங்களையும் பார்க்காது வியத்தகு மனநிலையை வளமாக ஆக்க வகை செய்வதுவே முன்னேறிச் செல்ல எளிய வழியாகும்.

இறுதி காலகட்டம் வாழ்க்கைப் பந்தயத்தில் ஒரு சவாலான பயணமாகும். கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் என்பது எவ்வளவு கஷ்டம். இதற்கு பிறகு உடல் பலத்தால் ஓட்டத்தை ஓட முடியாது. மனபலத்தால் தான் முடியும். உண்மையில் இப்பருவத்தின் இலாபமே, கட்டாயத்தின் பேரில் மனக் கதவைத் திறக்க அனேக வசதிகள் நம் வசப்படுவதை நாம் உணரமுடியும். அதைக் கொண்டு இறைத்துணையை தனதாக்கிக் கொள்ளவும் முடியும். இது ஓர் அனுபவ முதிர்வான பருவம், எதையும் விட்டுக்கொடுக்க துணியும் தருணம். பேரின்பம் போற்றும் பண்பு, பல காலங்கள் ஓடிவந்த களைப்பின்றி, சென்றடைய இனி வெகு தூரமில்லை என்ற திருப்தி நிறைந்த நிலையாகும். பெரிய பெரிய கருப்பான விசயங்கள் எல்லாம் சிறு துரும்பாக தோன்றும் தொன்மையான தன்மையாகும். ஆனால் ஓட்டம் முடிந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கும் ஏனெனில் காடு வா வா என்கின்றது, வீடு போ போ என்கின்றது…… என்ற சூழ்நிலைகளின் ஊச்சகட்டக் காட்சிகளின் அனல் அடிக்கும்.

விவேகமின்றி வேகத்தை மட்டும் பிரதானமாகக் கொண்டவர்கள் நன்றாக முன்னேறிச் செல்வது போன்று தோன்றும், ஆனால் இடையில் காணாமல் போவார்கள். தனக்குள் இருக்கும் சக்திகளைப் பயன்படுத்த அவரவருக்கு உரிமை இறைவன் கொடுத்த வரம். அதை எந்த காலத்திற்குள்ளும் முடித்துக்கொள்ளும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் வாழ்வாங்கு வாழ, நீடூழி வாழ மற்றும் ஆலமரம் போல் வாழ்க்கையை வாழ வேண்டுமா? அதற்கு முதலில் இருந்தே நிதானம், விவேகம், பொறுமை மற்றும் அமைதியைக் கடைபிடித்தால் மட்டுமே இறுதி நிலைக்கு முன்னேறவும் முடியும். வெற்றிக் கனியைப் பறிக்கவும் முடியும். தடுமாற்றம் ஏற்படும் சூழல் தான் ஆனாலும், வாழ்க்கை என்ற மாரத்தானில்  தாமறித்துப் பயணித்தால் தனக்கென ஓர் இடத்தை அனைவர் மனதிலும் தாராளமாக பிடிக்கலாம்.

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP