Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

வாழ்க்கை வாழத்தான்! வீணடிப்பதற்கல்ல!

Tuesday, 29 September 2020 / Published in Article – List

வாழ்க்கை வாழத்தான்! வீணடிப்பதற்கல்ல!

– பி.கு. செண்பகராஜ், பிரம்மா குமாரிகள், மதுரை

இன்றைய காலக்கட்டத்தில் கடன் தொல்லை, குடும்ப வறுமை, தொழிலில் நஷ்டம், தோல்வி, தேர்வில் தோல்வி போன்றவற்றால் தற்கொலை செய்துகொள்வது பத்திரிக்கைகளில் தினமும் வரும் தவறாத செய்தியாகி விட்டது. இந்நிலையில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் ஓர் அதிர்ச்சித் தகவலில், 2014- ஆம் ஆண்டின் நிலவரப்படி, இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 15 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரம், தமிழகம் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாம். பெருநகரங்களில் தற்கொலை எண்ணிக்கையில் சென்னையே முதலிடம் வகிக்கின்றதாம்!

விவசாயிகள் முதல் தொழிலதிபர்கள் வரை இந்தியாவில் பெரும்பாலான தற்கொலைகளுக்கு முக்கியக் காரணம், கடன் தொல்லைதான் எனக் கூறப்படுகிறது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள். குடும்பப் பிரச்சனை, காதல் தோல்வி, வாழ்க்கையில் விரக்தி இப்படி பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இவைகள் ஒரு காரணமாக இருக்குமே தவிர, இது மட்டுமே காரணமாக இருந்து விட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு உண்மையான காரணம் தான் என்ன? சற்றே சிந்தித்துப் பார்த்தால்… வரும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு பதிலாக தற்கொலை செய்து கொள்வது எளியது என அனேகர் நினைக்கின்றனர். உண்மையில் இது தனக்குத்தானே கொடுத்துக்கொள்ளும் மிகப்பெரிய தண்டனை. இந்த தண்டனை கொடுந்தவறு செய்து விட்டு மரணதண்டனை அனுபவிப்பவரை விட மிக மோசமானது. ஏதோ செய்த காரியத்தை (தவறை) பெரிய தவறாக கருதியும் அவமானம் என்ற பெயரில் மனம் தாங்காமலும் தற்கொலை முயற்சி நடக்கின்றது. தன்னை தற்காத்துக்கொள்ள முடியாதவர்கள் தான் தற்கொலை முயற்சிச் செய்பவர்கள். இவர்கள் முக்கியமாக பிரச்சனையை மட்டுமே யோசிப்பவர்களே தவிர, பின்விளைவை யோசிப்பதில்லை. தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களும், தற்பெருமை அதிகமாக இருப்பவர்களுக்கும் கூட இப்படிப்பட்ட எண்ணம் வருவது வழக்கம்.

தான் காத்த பொறுமையையே அதிகமானது எனநினைத்து பொறுமையற்றவர்களாக ஆகி இந்தத் தவறை செய்கின்றனர். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று சொல்பவர்களின் இறுதி முயற்சி இதுவாகத்தான் இருக்கும். பொறுமைக்கே ஒரு எல்லையா? எல்லையிருந்தால் அதன் பெயர் பொறுமையா? பொறுமையாக இருந்துவிட்டால் போதுமே, நீங்கள் நினைத்த அனைத்தும் உங்கள் பின்னே அடிமைபோல் வருமே !

தனது இயலாமையை நினைத்துக்கொண்டே இருப்பது மிகவும் தவறு, முடிந்ததை செய்து மகிழ்ந்து வாழ்வதுதான் சரி. எல்லாம் நினைத்தபடி யாருக்கும் நடப்பதில்லை, முயற்சிப்பது நமது வேலையே தவிர வெற்றி என்பது நமது புண்ணியத்தின் அடிப்படையில் கைகூடுவது. அந்த புண்ணியத்தை சேமிக்க நாம் எந்த வேலையும் செய்வதில்லை, மாறாக எனக்கு எதுவும் கிடைக்கவில்லை, நான் வாழ்வதே வீண், எனக்கு அதிஷ்டமில்லை, என்னால் வெற்றி கொள்ளமுடியவில்லை, என்று இப்படி ஏதேனும் ஒரு காரணத்தை மட்டும் சொல்லிக் கொண்டே செல்வது தீர்வாகாது. எந்த தீர்வும் வெளியிலிருந்து கிடைக்காது, நாமேதான் தீர்வை உருவாக்கவேண்டும். உண்மையைச் சொன்னால் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு, அந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக தன்னைக் கருதினாலே கிடைத்துவிடும். மற்றவர்களையோ, ஏதோ ஒரு சூழ்நிலையையோ காரணமாக்கினால் அந்த பிரச்சனை உங்களிடமிருந்து போவதில்
பிரச்சனையாகிவிடும்.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள வலிக்கு உதவும் கரங்களை மீறி, வலியின் தாக்கம் அதிகரிக்கும் போது, சம்பந்தப்பட்டோர், தற்கொலைக்கு முயல்வார்கள். ஆனால் இது ஒருவரின் தனிப்பட்ட தேர்வாகும். காரணங்கள் ஆயிரம் இருக்கலாம்; ஆனால், அந்த காரணங்களை கையாள, அதிகமான மன தைரியம் தேவைப்படும். மனம் கட்டுப்பாட்டின் வரம்பை மீறும்போது, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தளைத்தோங்க ஆரம்பிக்கின்றது. மனவலிமை தான் மனிதவாழ்வு. மனிதனுக்கு பலவீனம் பயம். பயம் நரக வாழ்க்கை. வலிமையே மகிழ்ச்சியான
வாழ்க்கை தரும். பலவீனமும், பயமும் ஒரு மனிதனுக்கு இடையறாத சித்தரவதையாகவும், துயரமாகவும் அமைகிறது. எந்த வலிக்கும் ஒரு வரம்புண்டு. அந்த வேதனைக்கு ஒரு படி மேலே சென்று விட்டால் போதும் வ-யிருந்தாலும் வேதனையாக இருக்காது. எனவே வ-க்கு வ-கொடுத்து நல்வழிதனை தனதாக்குங்கள். பிரிந்த உறவுகள், வலி நிறைந்த விழிகள், கசப்பான காலங்கள்
இவற்றோடு நம் காலத்தை கடத்திவிட முடியாது. இருப்பதைக் கொண்டு வெறுப்பதைப்போக்கி நகருகின்ற நதியாய் இருக்க வேண்டும். விட்டமில்லா வானத்தில் இறக்கையதை நம்பி வலம்வரும் பறவைபோல், உயர்ந்த மனிதஉறவுகளை நன்மையாக நம்பி வலம்வருவோம். வரையரை கொண்ட வாழ்வுவானத்தில். வசிக்கும்வரை யாரையும் வெறுக்கும்மனம் வேண்டாம்.

வாழப்பிடிக்கவில்லை என்று விளையாட்டுக்கும் கூறாதீர்கள். வாழ்க்கை இறைவன் கொடுத்த வரம். வாழ்க்கை என்ன வாளைமரமா வெட்டி சாய்ப்பதற்கு, அது கூட வாளையடி வாளையாக வாழ்ந்து வருகின்றது. மனித இனம் ஏன் இப்படி வாடிப் போகின்றது. வாழப்பிடிக்கவில்லை எனில் ஏன் பிறந்தாய்? என்ற கேள்விக்கு கூட நானா பிறந்தேன்? என்னை பெற்றார்கள் என்று பதில் கூறுவார்கள். பிறக்கும் போது யாரிடம் எந்த வினையும் இல்லையே, வினையை வளர்த்தது யார்? நம்மால் விளைந்த வினையை நாம் தான் களையவேண்டும் அல்லவா! இதற்கு வேறு வழியில்லை, தற்கொலை மட்டும் என்ன விதிவிலக்கா? இயல்பாய் சிரிக்கும் தேவதையின் சிலைபோல் சிரித்துக்கொண்டே இருக்கப் பழகுங்கள். சிரிப்பின் சிறப்பது இறப்பை வெல்லும். வரும் சோர்வது உங்களுக்குள் எந்த தேர்வையும் எதிர் கொள்ளவிடாது. உங்களை நோக்கி வந்த அம்புகளை சேர்த்து வையுங்கள், அதைக்கொண்டு தடையாளக் கற்று, நம் அடையாளத்தை
புரியவைப்போம்.

உடல் நலம் பற்றி நிறைய யோசிக்கும் நாம் மன நலம் பற்றி அதிகம் கவலைப் படுவதில்லை. உண்மையில், 300க்கும் அதிகமான மனநிலை பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகின்றது. மனதைப் பாகுபடுத்துவதற்கு பதிலாக பக்குவப்படுத்துங்கள் இல்லை எனில் பாம்பின் நஞ்சைக்காட்டிலும் கொடியது மனப்பிரச்சனை. மனக்குழப்பம் தான் ஒருவருக்கு தற்கொலை எண்ணமாக மாறுகின்றது. ஒரு பிரச்சனையோ, மனக் குழப்பமோ, ஆறு வாரங்களுக்கு மட்டுமே ஒருவரை தொந்தரவு செய்யும், அதற்குள் அதிலிருந்து அவர் விடுபட்டிருக்க வேண்டும். இல்லையெனில், அது தற்கொலை எண்ணமாகத்தான் மாறும். வரும் வெற்றி தோல்விகளை மிகக் கவனமுடன் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள். வரும் வெற்றிகளை தலைமேல் வைக்காதீர்கள், தோல்விகளை மனதினுள் வைக்காதீர்கள். குழப்பங்களை குத்தகைக்கு எடுத்து, கொட்டுவதற்கு மனமென்ன குப்பைக்கிடங்கா? தொடர்ந்து ஒரே பிரச்னை, உங்களைப் துன்புறுத்துகின்றது எனில் அது மன நோயாக மாற ஆரம்பித்து விட்டது என்றே அர்த்தம். இதற்காக பயப்படத் தேவையில்லை. பைத்தியம் பிடிச்சிடுச்சு என்று அலற வேண்டாம். ‘வாழ்நாளில் இப்படியெல்லாம் நான், பிரச்னையை சந்தித்ததே இல்லை‘ என்று கூறவும் வேண்டாம். அனைவரும் ஏதாவது ஒரு கட்டத்தில், பெரிய அளவிலான பிரச்னைகளை சந்தித்துத்தான் ஆகவேண்டும். பாதிப்பை, ஆரம்பத்திலேயே கவனித்து சரிசெய்து விட்டாலே போதுமானது. எந்த பிரச்சனையும் வந்தது என்றால் ஒரு நாள் சென்றுதான் ஆகவேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும். நிரந்தரமற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, தொல்லைகள் மட்டும் நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக இந்த வியாதியை யாராலும் எப்பொமூதும் சரி செய்யமுடியாது. மாவட்ட அளவில் ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த கவர்னர் ஒருவருக்கு தீடீர் என ஒரு விபத்து ஏற்பட்டுவிடுகின்றது. அதில் சரியாகியும் அந்த விபத்தால் அமெரிக்கா செல்லும் வாய்ப்பை இழந்த அவர் வெறுப்பில் தனது வாழ்க்கையின் விளிம்புக்கே செல்லத் (தற்கொலை செய்யத்) துணிந்துவிடுகிறார். அந்த சமயம், அவர் அமெரிக்கா பயணிக்க இருந்த விமானம் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியது என்ற செய்தி பார்த்து தனது தற்கொலை முயற்சியை கைவிட்ட செய்தியை நீங்கள் அறிந்ததுண்டா? இப்படிப்பட்ட உண்மைச் சம்பவம் எத்தனையோ உள்ளது.. வாழ்க்கை என்பது இன்ப துன்பங்களால் ஆனது என்பதைப் புரிந்து நடப்பவர்கள் யாரும், தற்கொலை செய்து கொள்வதில்லை. கடைசி வரை முயற்சி செய்து விட்டு, மீதியை விதி மேல் போட்டு, நடப்பவை
அனைத்தும் நல்லதே என நினைத்து முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து செல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். நின்றுபோகும் அளவிற்கு மனதில் ஒரு திகட்டல் வந்தாலே மிகவும் ஆபத்து.
எனக்கு எல்லாம் தெரியும்; நான் முக்கியமானவன்; எனக்கு மட்டும் தான் பிரச்சனை, துக்கம் என்று யார் நினைத்துக் கொண்டிருக்கின்றனரோ, அவர்களை இந்த தற்கொலை தனதாக்கிக் கொள்ளும், ஜாக்கிரதை! முதலில், தற்கொலை செய்யத்தூண்டும் சம்பவத்தையும் அதன் மூலம் ஏற்பட்ட வலியை மறக்க முயற்சி செய்யவேண்டும். மறக்கமுடியவில்லையே என்பது தான் இவர்களின் எண்ணமாக இருக்கும், அப்படி என்றால் விளைவை நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். பதிலாக மறப்பது எளிது என்பதை உணரவேண்டும். மறதி மொத்தத்தில் ஒரு அருமையான மருந்து என்பதை மறந்துவிடாதீர்கள். மாணவப்பருவத்தில் மறதியால் கஷ்டப்பட்ட நாம் இதை மறக்கமுடியாதா? இல்லை, அந்த மறதி வேறு, இந்த மறதி வேறா? இரண்டும் மனதின் பிதிபலிப்பே தவிர வேறில்லை. இறைவன் படைப்பிலே அனைவரின் மனதிலும் இந்த ஒரு அருமையான மறதி மருந்து இயற்கையாகவே உள்ளது என்று சொல்லித் தெரியத் தேவையில்லை. மறந்துவிடுஙகள் மாற்றிவிடுங்கள், தொடர்ந்துவிடாதீர்கள். சிரிக்க மறந்த நாள் இப்புவியில் வசிக்க மறந்தநாள் என்பதைத்தெரிந்து கொள்ளுங்கள். நல்லதை விதைத்திருந்தால் நல்லதே அறுவடையாகும். அன்பிற் சிறந்ததவமில்லை என்றார் பாரதி. அன்பை விதைத்து, உள்ளதைச் சொல்லி, நல்லதைச் செய்து ரசித்துவாழ்வோம். தற்செயலாகக் கூட எழும் தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்கவேண்டும். எதுவும் தலைபோகின்ற விசயமில்லை, மரம்-செடிகள் கூட தளிர்கின்றதே, விலங்குகள் கூட தனக்குத்தானே இப்படி விலங்குகளை(தூக்கு) போட்டுக்கொள்வதில்லையே, மானிட ஜென்மம் மகத்தானது, அதில் இறைவன் கொடுத்திருக்கும் கொடுப்பினைகளைப் பற்றி யோசித்தாலே போதுமே. அந்த கொடுப்பினைகளில் குறையுள்ளவர்கள் கூட இந்நாட்களில் மிகப்பெரிய சாதனை புரிந்து வருகின்றார்கள் தெரியுமா? உலகிலேயே முதன் முறையாக ஒரு கால் இல்லாமல்  உயர்ந்ததிலும் உயர்ந்த மலை உச்சியை(எவரெஸ்ட்) அடைந்தவர் என்ற பெருமை ஒரு இந்தியப் பெண்மணிக்கு(அர்னிமா சின்கா) கிட்டியுள்ளது.

நம்மிடம் இருக்கும் குறைகளைப் பற்றி யோசிக்காமல், அந்த குறையையும் தாண்டி ஒரு இலக்கை கணித்து முயற்சி செய்து அடைந்து விட்டால், அந்த குறையின் கரையைக் கூட கழுவி விடமுடியும். குறையில்லாத மனிதன் இவ்வுலகிலேயே எங்குமில்லை. குறையை நிறையாக மாற்ற கிடைக்கும் எத்தனையோ வாய்ப்புகளை கண்டறிந்து, நம்மைவிட்டு இந்தக் குறை காணடிப்போமே! இரும்பாய் துருப்பிடிப்பதை விட கரும்பாய் இருந்து சக்கையாவது மேல். நம் துன்பத்தை நம்மோடு வைத்துக்கொண்டு மற்றவர் மகிழ்ச்சியில் மனமிசைந்து ஒன்றுபடுவோம்.

வாழ்க்கை வாழத்தான்! வீணடிப்பதற்கல்ல!

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP