– பி. கு. லதா, மதுரை
தினமும் அதிகாலை எழுந்து இறைவழிபாட்டுடன் வாழ்க்கையை துவக்க வேண்டும். “பசித்திரு, தனித்திரு, விழித்திரு” என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும். “பசித்திரு” என்பது தேடல். “தனித்திரு” என்பது இறைவனோடு ஒன்றியிருத்தல். “விழித்திரு” என்பது நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உள்வாங்கி விழிப்புடன் இருத்தல். அன்றாடம் நமது தேடல் தொடர வேண்டும். நல்ல விஷயங்களைத் தேடி ஓட வேண்டும்.
இதுவே நமது வாழ்க்கைக்கும் சமுதாய மேம்பாட்டுக்கும் உதவும். பணம், பொருள், ஞானம் என எல்லாம், எல்லோருக்கும் பயன்பட வேண்டும். இதைப் பெற தேடல் அவசியம். ஒரு பசு ஒரு லிட்டர் பாலை மட்டும் தனது கன்றுக்கு கொடுத்துவிட்டு மீதி ஒன்பது லிட்டர் பாலை நமக்குத் தருகிறது. மரம், செடி, கொடி, ஆறு என எல்லாம் தன் வேலையை சிறப்பாகச் செய்து, மற்றவர்களுக்கு பயனுள்ளதாக
இருக்கின்றன. அது போல் நம் வாழ்க்கையும் இருக்க வேண்டும். இறைவன் அளித்த மூளையை வீண் விஷயங்களில் செலவிடாதீர்கள். எத்தனை தடை வந்தாலும் அனைத்தையும் உடைத்தெறிந்து, தனது பாதையில் தானே பயணிக்கிறது ஆறு. அது போல் நமது பயணம் இருக்க வேண்டும்.
எதற்கும் வருந்தாமல், வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்வதில்
குழந்தையைப் போல் இருக்க வேண்டும். குழந்தைக்கு அவமானம் தெரியாது. விழுந்தால் அழுது முடித்து விட்டு மீண்டும் எழுந்து நடக்கும். அது போல் தோல்விகளால் துவண்டு விடாமல் தொடர்ந்து முயலுங்கள். வலிகளை மறந்து சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், வாழ்வு வசந்தமாகும்.

நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. அழகாய் அமைந்த வாழ்க்கையை பலருக்கும் வாழத் தெரிவதில்லை. இந்த வாழ்க்கை ஏன்? என அறிந்து கொள்வதற்கு முன்பே பலரது வாழ்க்கை முடிந்து விடுகிறது. விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. தங்களது நலனையும் கவனித்துக் கொண்டு பெற்றோரையும் முதியோரையும் பாதுகாக்க வேண்டும். வாழ்க்கையில் சுயநலம் கூடவே கூடாது. ஐம்பது சதவீத வாழ்க்கை நமக்காகவும் மீதமுள்ள ஐம்பது சதவீத வாழ்க்கை பிறருக்காகவும் வாழ வேண்டும்.
உடலையும் உள்ளத்தையும் கவனிக்க மறந்து விடுவதால் பல
சிக்கல்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன. நூறு வருடம் வாழ
வேண்டுமெனில் உடலும் மனதும் நூறு சதவீதம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு சரியான உணவும் உடற்பயிற்சியும் தேவை. மன ஆரோக்கியத்திற்கு தியானம் அவசியம். தினமும் ஒரு மணிநேரம் இறைவனுடன் செலவழித்தால் இறைவன் அந்த இரண்டு ஆரோக்கியத்தையும் நமக்குத் தருவார்.

