Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

அர்த்தமுள்ள ஆன்மிகம்

Tuesday, 29 September 2020 / Published in Article – List

அர்த்தமுள்ள ஆன்மிகம்

பி.கு. செண்பகராஜ், மதுரை

ஆன்மிகம் என்ற சொல்லே மிக அருமையானது. பழக்கமான ஒரு பிடித்தமான சொல் என்றே சொல்லலாம். இதில் பலன் அதிகம் உண்டு என்று அனைவருக்கும் தெரிந்த உண்மை. அந்த ஆன்மிகத்தைப் புரிந்து கொள்வதற்கே ஓர் அலாதியான ஆர்வம் வேண்டும். ஆன்மிகத்தை அறிந்து கொள்ள ஆன்மிக சக்தியும் அவசியம். இது அடிப்படையான ஒன்று என்பதையும் யாரும் மறுப்பதில்லை. ஏனெனில் மனிதநிலையே, கண்களுக்கு தெரிந்த ஐந்து அழியும் தத்துவங்களால் ஆன உடலாலும். அழிவற்ற ஆத்மாவாலும் (உயிராலும்) ஆனதாகும். இந்த ஆத்மாவைப் பற்றி அறிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும் தான் ஆன்மிகம். மனதால் உணரத்தான் முடியுமே தவிர தொட்டுணரும் கலை அல்ல இந்த ஆன்மிகம். இதைப் பற்றி வெளிப்படையாக பேசுவதும் அரிது, அனுபவம் செய்வதும் அரிது. ஆத்மாவை சத்தியம் (சத்) என்று கூறுவார்கள். இந்த தன்னுணர்வே அனைத்து உண்மைகளுக்கும் அடைப்படையாகும். இங்கிருந்தே ஆன்மிகம் துவங்குகிறது. சத்தியமே ஆன்மிகம்! மற்றவையனைத்திற்கும் ஒரு எல்லையுண்டு, இதற்கு எந்த எல்லையும் கிடையாது. ஒரு அழகான பொருளை ரசிப்பது எளிது, ஆனால் அந்தப் பொருளிற்கு ஆதாரம் எது? என்பதை அறிந்து கொள்ளும் பொழுது ஒரு தெளிவு ஏற்படுகிறது. இதுபோல் உடல் அழகைக் கடந்து உள்ளே உள்ள அதி உன்னதமான ஆத்மா என்ற ஆதாரத்தைப் பற்றிய அனுகுமுறையே ஆன்மிகம்.

அனேக உண்மைகளை உள்ளடக்கிய ஆன்மிகம், கண்களுக்கு தெரியாத அனேக விசயங்களை படம் பிடித்து காட்டுகிறது. ஆத்மா, பரமாத்மா, காலக்கணக்கு, கர்மக்கணக்கு (செயல்வினை பலன்), மரணத்திற்கு பின், மரணத்திற்கு முன் போன்ற அனேக இரகசியங்களை உணரவைப்பது ஆன்மிகமாகும். பக்தி என்ற பெரிய பாடத்திற்கு சிறிது வேறுபட்டு இயங்குகிறது இந்த ஆன்மிகப் பாடம். பக்தியைக் காட்டிலும் உயர்ந்ததா இந்த ஆன்மிகம்? என்ற கோள்விகள் கூட அனேக மனங்களில் எழுந்துள்ளது. உண்மையில் பக்தி ஒரு நிலை என்றால் மற்றோர்நிலையாகும் ஆன்மிகம். இது இருக்கும் இடத்தில் அது இராது என்பது தான் உண்மை. ஆனால் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் மற்றும் தொடர்ந்திருக்கும். ஆனால் இறுதியில் தனித்து நின்றுவிடும். இரண்டிற்கும் தனித்தனி பலன் உண்டு. ஏன் அனைத்திற்கும் பலன்கள் உண்டு. தான் தனது இடத்தில் உயர்ந்தது தான் என்பது திண்ணம். எனினும், இரண்டும் இறைவனோடு சம்பந்தப்பட்டது மற்றும் சார்ந்தது.

ஆன்மிகம் என்பது ஆஸ்திகத்திற்கும் நாஸ்திகத்திற்கும் நடுவராக உள்ளது. எது சரி என்ற கேள்விக்கு இடமில்லை. எதற்கும் ஒரு பலாபலன் உண்டு என்று கூறுவது தான் ஆன்மிகம். சமநிலைத்தன்மை கொண்ட ஓர் பேராற்றலாகும் இந்த ஆன்மிகம். சமநிலையை வகிப்பதற்கு இரண்டு பக்கங்களை அறிந்திருக்க வேண்டும். அதற்கு ஆன்மாவைப்பற்றிய தன்னறிவு மிகவும் அவசியமான மற்றும் அடிப்படையான ஒள்றாகும். தன்னுணர்வே தலைசிறந்தது. தன்னைப்பற்றி அறியாதோர் எதையும் அறியாதோர் என்பார்கள். அது ஒரு தீர்க்கதரிசனம். உங்கள் வாழ்க்கையின் வழித்தடத்தை அறிவுறுத்தும், உங்களை புதுமையின் பக்கம் அழைத்துச் செல்லும். நம்மை நாமாகவே வாழ வகை செய்யும், அளவிடமுடியாத அளப்பெரிய சக்தியாகும். “ஏ அர்ஜுனா, நீ எப்பொழுது உன்னை அறிந்து கொள்வாயோ அப்பொழுதே என்னை உன்னால் அறிந்து கொள்ளமுடியும். பிறகு தான் உனக்கு அனைத்து வெற்றியும் கிடைக்கும்” – இது கீதைபகவானின் வாக்கு.

ஒவ்வொருவரின் ஆன்மிசக்தியின் இயக்கம் அதி உன்னதமானது. ஆன்மாவிற்குள்ளே கண்களுக்கு தெரியாத எண்ணசக்தி, சிந்தனை சக்தி. உணர்வுநிலை மற்றும் அடிப்படையான குணாதிசயங்கள் என்று நீண்ட பட்டியல் உண்டு. இதைப் பற்றிய அறிவே ஆன்மிகம். நிரந்தரமாக இடையறாது இயங்கிக்கொண்டிருக்கும் இந்த இயக்கங்கள் அதிசயமானவை. கண்களால் கண்டுணர முடியாத இதைப்பற்றி நன்கு அறிந்து கொள்வதற்கு எத்தனை காலங்கள் பிடிக்குமோ என்று விட்டுவிட்டோம். ஆனால் இந்த இயக்கங்கள் இன்றி எந்த மனிதரும் இங்கில்லை, ஏன், எந்த செயல்களுமில்லை.

அனைத்து செயல்களுக்கும் எண்ணங்களே அடிப்படையான விதையாகும், இதை மனோ சக்தி என்று கூறலாம். நல்லவையோ, தீயவையோ இதன் பலனாக, நம்முள் பெரும் மரமே வளர்ந்துள்ளது. எண்ணங்களைக் குறைத்து, நேர்மறையாக எழச் செய்து, மனதை அலையாமல் அமைதியில் திளைத்திருக்கச் செய்வது ஆன்மிகமாகும். அடுத்ததாக மனதின் கண்கள் என்று கூறப்படும் புத்திசக்தி, அது இறைபிம்பத்தை நமது மனத்திரையில் பிரதிபலிக்கச் செய்யும் ஆன்மிக அதிசயமாகும்.  இது விசயங்களை தெளிபடுத்தி, புரியவைத்து வெற்றிபெற வைக்கும் புத்திசக்தியாகும்

விதவிதமான மனம் மற்றும் புத்தியின் வினோதங்களை எல்லாம் சாட்சியாக இருந்து பார்த்துக்கொண்டும், இரசித்துக்கொண்டும் உள்ளேயே உரைந்திருக்கும் ஒரு மாபெரும் சக்தி, உணர்வுசக்தியாகும். அதை உள்ளம், சுபாவம் மற்றும் மனசாட்சி என்றும் கூறப்படுகிறது. இது மனம் மற்றும் புத்தியின் காரியங்களைப் பற்றி யோசிக்காது, மாறாக அது நல்லதோ தீயவையோ ஒரு குழந்தைபோல் அனைத்தையும் தனதாக்கிக்கொள்ளும் உரைவிடமாகும். எக்காரியத்தைச் செய்யவேண்டுமெனினும் அதற்கான கட்டளைகள் இந்த இடத்தில் தானாகவே பிறப்பிக்கப்படுகின்றது. உணர்வின் சக்தியே உன்னதமான ஆன்மிக சூழ்நிலையை உருவாக்குகிறது. சராசரி மனிதர்கள் இந்த உணர்வு நிலையில் அதிகமாக வசிப்பதில்லை, ஏன், இதைப்பற்றி எல்லாம் யோசிப்பதே இல்லை, எனவே தான் அவன் தன்னிலையை சிலநேரங்களில் இழக்கின்றான். இந்த உணர்வு நிலையில் வசிப்பவனே நினைத்ததை எல்லாம் சாதிக்கும் ஆன்மிக சக்திபடைத்தவன்(மகான்) ஆவான்.

உணர்வோடு இருப்பது என்பது அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள மலைக் குகையில் அமைதியான உள்மையத்தில் வசிப்பதற்குச் சமமாகும். இதற்கும் உள்ளே சென்றால், ஒரு பெரிய சுரங்கம் தென்படும். அங்கு குணாதிசயங்கள் என்ற பொக்கிசங்கள் நிறைந்துள்ளது. மனிதர்களிடம் உறங்கிக் கிடக்கும் ஞானம், அமைதி, தூய்மை, அன்பு, மகிழ்ச்சி, ஆனந்தம், சக்தி போன்ற ஆன்மிக குணங்களில் இவை முக்கியமானவைகள். எந்த பாகுபாடின்றி அனைவருக்குள்ளும் இந்த குணங்கள் 100 சதவீதம் வல்லமையுடன் தான் இருக்கின்றன. இப்பொக்கிசத்தைப் பயன்படுத்தும் விதத்தில் அதன் பலன் வித்தியாசப்படுகிறது. தெய்வீக குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை சொர்க்கத்தின் தேவி தேவதைகள் என்று அழைக்கப்படுகின்றது. இன்று மனிதர்கள், இவர்களுக்கு  மதிப்பளிக்கும் முகமாக பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றார்கள். தன்னிடமும் இவைகள் உண்டு என நினைப்பதில்லை, ஏனோ!  மனிதர்களின் மதிப்பே இந்த குணத்தின் விழிப்படைந்த நிலையின் ஆதாரத்தில் அமைகின்றது. பணம் பந்தியிலே குணங்கள் குப்பையிலே என்றாகிவிட்டது. ஆனால், ஆத்மீக குணஅம்சத்தில் இப்பொழுது நிலைத்திருந்தாலே போதும், அது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொக்கிசங்களையும் தானாக ஈர்த்து கொண்டுவந்து தரும்.  இது தான் யாருக்கும் புரிவதில்லை, தெரிவதில்லை, இதற்காக நேரத்தை ஒதுக்குவதும் இல்லை. தன்னுள் இருக்கும் இந்த பொக்கிசங்களை விட்டுவிட்டு உலகெல்லாம் தேடினாலும், வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்யிக்கு ஊரெல்லாம் தேடுவதாக அர்த்தமாகும். தன்னுள் உள்ள குணாதிசங்களின் உணர்வு உங்களை நடமாடும் தேவதையாக ஆக்கும் வல்லமை படைத்தது. இதற்கு பெயர் தான் ஆன்மிகப் பொலிவாகும். குணங்கள் நிறைந்து குறைகள் நிவர்த்தியாகும். தன்னைக் குணங்கள் படைத்த தேவதையாக பாவிக்கச் செய்கின்றது இந்த ஆன்மிகம்.

இதை நோக்கிய ஒரு வினோதமான பயணம் தான் ஆன்மிகப் பயணமாகும். ஒது உள்நோக்கிய, உள்ளொழிப் பயணம், மிகப் புனிதமானது.

ஆத்மாவைப் பற்றி மட்டுமல்லாது பரமாத்மாவைப்பற்றி அறிந்து கொள்வதும், உணர்வதும் ஆன்மிகமாகும். ஆத்மாக்களுக்கு மேலானவர் பரம்(உயர்ந்த) ஆத்மா ஆவார். நாம் அனைவரும் அவரின் குழந்தைகள் என்ற பார்வையை வளர்ப்பது ஆன்மிகம். இதனால் சகோதரத்துவம் நம்மிடையே பெருகும். ஆத்மா-ஆத்மாவுடனான மற்றும் பரமாத்மாவுடனான இந்த உறவை உணரவைப்பதுவே அதிமேலான ஆன்மிகமாகும். இதுவே ஆன்மிகத்தின் இறுதி கட்டத்தை அது வலியுறுத்தும்.

தேகம், தேகம் சார்ந்த விசயங்கள், பதார்த்தங்கள், பண்டிகைகள் போன்ற அனைத்திற்கும் அப்பால் தனித்து செயல்படும் ஒரு மாபெரும் சக்தி ஆன்மிகமாகும். ஆத்மிக சக்தியை யாரும் அழிக்கவே முடியாது. அனைத்து ஸ்தூல சக்திகளும் மாறுமே தவிர அழியாது என்று கூறுவதே ஆன்மிகமாகும். ஆன்மிக சக்தி எங்கும் நிறைந்துள்ளது, ஒரு சில இடத்தில் தான் கிடைக்கும் என்று கருதுவது கூட ஆன்மிகம் அல்ல. அதற்காக, எதையும் துறக்கவோ, காடுமலையெல்லாம் அலையவோ அவசியமல்ல. என்னிடம் இருக்கின்றது என்று நம்புவதுதான் ஆன்மிகம். உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொள்வது தான் நடைமுறை ஆன்மிகமாகும்.

ஆத்மாவின் அகப் பார்வை, எப்பொழுதும் பரமாத்மாவை நோக்கியே இருந்தால் ஆன்மிக சக்தி அதிகரிக்கும். உடல், உடல் சார்ந்த பயிற்சிகளுக்கு அப்பால் ஆத்மா மற்றும் பரமாத்மாவுடனான தொடர்பு, சம்பந்தம், இணைப்பு மற்றும் யோகத்தை இயல்பாக்குவது ஆன்மிகமே. இதை நிரந்தரமாக்குவது ஆன்மிகப் பயிற்சியாகும். புருஷார்த்தம் எனக் கூறப்பட்டுள்ளது. புருஷ் என்றால் ஆத்மா, அர்த் என்றால் ஆத்மாவின் முன்னேற்றத்திற்காக செய்யும் ஆன்மிக சாதனையைக் குறிக்கின்றது. ஐந்து தத்துவத்தால் ஆன உலகத்தைச் சுற்றிலும் உங்களுடைய வெண்மையான ஆன்மிக சக்தி, பாதுகாத்து வளையமாக எப்பொழுதுமே உள்ளது. இதை உணர்ந்தவர்களுக்கு அந்த சச்தி, அனேக நன்மைகளைச் செய்யும். உண்மையில் எங்கும் எதிலும் ஆன்மிகமே, ஆன்மிகமின்றி உலகமே இல்லை.

ஆன்மிகத்தால் நெஞ்சம் பயமின்று வாழத் துவங்குகிறது. கவலை என்ற வலையிலிருந்து களைந்து பாதுகாப்பு கவசமாகிறது. கோபம் என்ற அக்னி அன்பாக மாறுகிறது. கடந்ததை கடத்திவிட்டு நிகழ்காலத்தில் வாழ வகை செய்கிறது. மனமகிழ்ச்சி என்ற மாமருந்து முழுமையான ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. நேர்மை – நிதானத்தில் நிலைக்கச் செய்கிறது. அன்பு, பாசத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. ஆன்மிக அறிவுடைமை, அகந்தையை அகற்றுகிறது. எண்ணங்களின் எண்ணிக்கையை குறைத்து அமைதியாக்குகிறது உடலழகை கடந்து உள்ளத்தின் அழகை உயர்த்துகிறது முயலாமையை விரட்டி, வெற்றிக்கு விதையை வித்திடுகிறது இந்த ஆன்மிகம்.

தவளை தான் விழுந்த கொதிக்கவைக்கப்பட்ட தண்ணீர்ப் பாத்திரத்தின் வெப்பத்தை சிறிது சிறிதாக சமாளித்து, தனது சக்திகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்த பிறகு அதிக வெப்பத்தில் இறந்து விடுவது போன்று மனிதர்கள் தன்னிடம் இத்தனை ஆன்மிக சக்திகள் இருந்தும், உலகின் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கும் மூல காரணத்தைப் பற்றி யோசிக்காமல் அதை சமாளித்துக் கொள்ளலாம் என்று பிரச்சனையோடு பிரச்சனையாக மாறி இறுதியில் அழிந்தே போகின்றார்கள். ஆன்மிக வழியே எளிமையான வழி! இதனைத் தவிர்த்து,  அத்தருணத்தைச் சமாளிக்க கடினமான தவறான  வழிகளே அதிக பலன் தரும் என்று எண்ணி கஷ்டப்படுவதே தனது வாழக்கையாக்கிக் கொள்கின்றார்கள். இயற்கைக்கு புறம்பாக தவறாக இயங்குவதே இன்றைய சூழ்நிலையாகும். புதுமையை விரும்பாது பழக்கமானதை மட்டும் சாதகமாக நினைத்துக் கொண்டு வீழ்ந்தே கிடப்பது என்பது ஆன்மிகம் அல்ல. தனது தொன்மை வாய்ந்த தன்மையில் நிலைத்திருப்பதுவே உயர்ந்த நிலையாகும். காலத்திற்கு ஏற்றவாறு தன்னை வளைத்துக் கொள்ள வைப்பது ஆன்மிகம், வாழ்க்கையின் அடித்தளமே ஆன்மிகம் தான்.

ஆன்மிகம்…

யோசித்திக்கொண்டே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் இயல்பு

பயந்து கொண்டே இல்லாமல் பண்பட்டு இருக்கும் பண்பாடு

யாசித்துக் கொண்டே இல்லாமல் பெற்றிருக்கும் உணர்வு

குறையை நிறைவாக பாவிக்கும் பண்பு

மன்னிக்கும் மறக்கும் மனித மாண்பு

வெறும் வார்த்தை ஜாலமின்றி செயல்வீரம்

வீழ்ந்தே கிடக்காமல் விளைந்து நிற்கும் கம்பீரம்

மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் ஏற்றம்

கவலையை மறக்கடிக்கும் மாமந்திரம்

பாதகமானவற்றிலும் சாதகமானவற்றை உருவாக்கும் உன்னதம்

சதா முன்னேற்றிக்கொண்டே இருக்கச் செய்யும் மூலதனம்

அனைத்து பிரச்சனைகளிலும் மகிழ்ச்சி என்ற நிரந்தரதீர்வு

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP