பி. கு. லதா, மதுரை
துறவி ஒருவர் எப்போதும் ஒரு மரத்தடியில் அமைதியாக அமர்ந்திருப்பார். அந்நாட்டு இராஜா ஒவ்வொரு நாள் இரவும் தன் நகரத்தில் அனைத்தும் சரியாக உள்ளனவா என்று பார்க்க உலா வருவார். அப்போது அந்த இளம் துறவி எந்த ஒரு அசைவும் இல்லாமல் சிலை போல அமர்ந்திருப்பதைப் பார்ப்பார். ஒரு நாள் தனது குதிரையில் இருந்து இறங்கி வந்து “சுவாமி, தங்களது தவத்தை கலைத்ததற்கு மன்னிக்க வேண்டும்” என்றார். துறவி கண்களைத் திறந்து, “ நான் தவம் செய்யவில்லை, எப்போதும் தவத்திலேயே இருப்பேன். உங்களுக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார். அதற்கு ராஜா, “நீங்கள் என்னுடைய அரண்மனைக்கு வாருங்கள். நான் உங்களை பார்த்துக் கொள்கிறேன். இந்த மரத்தடியில் அமரத் தேவையில்லை. உங்களது அமைதியில் வியப்படைந்தேன். அதனால் அரண்மனைக்கு வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார். துறவி வருகிறேன் என்று ஒப்புக் கொண்டார். உடனே இராஜாவின் மனதில் குழப்பம் வந்து விட்டது. துறவியாக இருந்து கொண்டு மாட மாளிகையின் சொகுசுகளை ஏற்றுக் கொள்கிறாரே! இவர் உண்மையான துறவி கிடையாது என்று நினைத்துக் கொண்டார். ஆனாலும் சொன்ன வார்த்தையை மாற்ற முடியாது என்பதால் துறவியை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு தனி வசதிகள் செய்து கொடுத்தார். துறவியும் அவற்றை ஏற்றுக் கொண்டார். “என்ன துறவி இவர், அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறாரே. அமைதியாக அமர்ந்திருந்து என்னை ஏமாற்றி விட்டார்” என்று இராஜா நினைத்தார். இராஜாவின் எண்ணத்தை துறவி உணர்ந்தார். ஆனாலும் ஒன்றும் சொல்லவில்லை. ஆறு மாதங்கள் கழித்து, ஒரு நாள் அதிகாலையில் இருவரும் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தனர். அப்போது இராஜா துறவியிடம் “நானும் அரண்மனையில் வாழ்கிறேன். நீங்களும் அரண்மனையில் இருக்கிறீர்கள். உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்”, என்று கேட்டார். இருவரும் ஒரு நதிக் கரையை அடைந்தனர். நதியின் மறு கரையில் காடு இருந்தது. அந்த கரைக்குச் சென்ற துறவி, இராஜாவிடம் “நான் காட்டுக்குச் செல்கிறேன். நீங்களும் என்னுடன் வரத் தயாரா?” என்று கேட்டார். அதற்கு இராஜா “நான் எப்படி வர முடியும். எனக்கு அரண்மனை, குழந்தைகள், மக்கள் அனைவரும் இருக்கின்றனர். இவர்களை விட்டு எப்படி உங்களோடு வர முடியும்” என்று கேட்டார். துறவி, “இப்போது வித்தியாசம் புரிந்ததா. எனக்கு எந்த பந்தனமும் இல்லை. மரத்தடியில் இருந்த போதும் மகிழ்ச்சியாக இருந்தேன், அரண்மனையிலும் மகிழ்ச்சியாக இருந்தேன். என்னுடைய பார்வையில் அனைத்தும் ஒன்று தான். அது அரண்மனையாக இருந்தாலும் சரி, காடாக இருந்தாலும் சரி” என்று கூறினார்.
மனதளவில் பந்தனங்களில் இருந்து விடுபட்டு இருந்தால் நாம் எங்கிருந்தாலும் ஒரே நிலையில் இருக்கலாம். நம்மிடம் உள்ள அனைத்தும் இறைவன் கொடுத்தது என்று உணர்ந்து, நான் தர்மகர்த்தா மட்டுமே என்ற நினைவில் நிர்வகித்தால் கடமை என்ற பந்தனங்கள் இருந்தாலும் அனைத்து சூழ்நிலையிலும் கவலையின்றி மகிழ்ச்சியாக வாழலாம்.


