பி.கு. செண்பகராஜ், மதுரை
உடலுக்கு ஓய்வு கொடுக்க நினைக்கும் நாம் மனதிற்கு ஓய்வு கொடுக்க நினைக்கின்றோமா? மனஓய்வு என்றால் என்ன?
மனம் என்றால் என்ன?
எண்ணங்கள் உருப்பெறும் இடம் தான் மனம். உடலின் அனைத்து அசைவுகளுக்கும் காரணமே இந்த மனம் தான். உடல் ஓய்விலும் ஒரு மன ஓய்வு உள்ளது. தூக்கத்தின் பல நிலைகள், மனநிலையின் ஆதாரத்திலே தான் அமைகின்றது. மனம், உடலுடன் இணைந்து எடுக்கும் ஓய்வே முழுமையான தூக்கமாகும். உடலுழைப்பு இல்லாதவர்கள் கூட நன்றாக தூங்குகின்றனர் ஏன்? அங்கு எப்படியோ மனக்களைப்பு ஏற்பட்டுள்ளது. நேரடியாக மனதை அறிந்து அதற்கு ஓய்வு கொடுக்க கற்றுக் கொண்டவர்கள் வெகு சிலரே. அவர்களுக்கு பெயரே ஞானி மற்றும் யோகி. உடல், வேலைகள் செய்யச் செய்ய களைப்படைந்து ஓய்வு கேட்கும், அதற்கு தூக்கம் என்ற ஓய்வை அளிக்கவேண்டும், இல்லையேல் அதுவாக எடுத்துக்கொள்ளும். அதே போன்று மனதும் களைப்பாகும், அதற்கு எப்படி ஓய்வு கொடுப்பது? மனதிலோ ஓயாது எண்ணங்கள் இரவு பகல் ஓடிக்கொண்டே இருக்கிறனவே. எண்ணங்களுக்கும் ஒரு எல்லை உண்டு. சில நேரங்களில் மனதும் சிறுது பெருமூச்சி விடும் அதாவது எண்ணங்களில் ஒருவிதமான திகட்டல் ஏற்படும்.. அதுவே மனக்களைப்பின் அறிகுறியாகும்.. அதை அனுபவித்துள்ளீர்களா? ஒருவரின் உடலின் ஆயுள் இந்த களைப்பின் ஆதாரத்திலே தான் அமைகின்றது. எந்த மனமும் தனது உடலின் ஆயுள் காலத்தின் எல்லையை அவ்வளவு சீக்கிரம் முடித்துக்கெள்ள விரும்பாது. மரணம் ஒருவருக்கு சம்பவிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பே, இந்த வாழ்க்கை போதும் என்ற பெருமூச்சு வந்தாகிவிடும். அதற்கு பின்பே மரணம் என்பது ஏற்படும். மறந்தும் இப்படியெல்லாம் எண்ணுவது தற்கொலைக்கு நிகரானதாகும்.
மனத் திணறல்
இடைவிடாது ஒரு காரியத்தை செய்து முடிக்கவிளையும் நாம் அதற்கான பல எண்ணங்களை எழுப்பிக்கொண்டே இருப்போம். இதற்கிடையில் அந்த எண்ணங்களை சிறிது குறைத்துக்கொண்டாலே போதும் மனஓய்வு அனுபவமாகும். இது மன உழைப்புக்கு சிறுது ஓய்வு கொடுப்பதாகும். ஒருவர் ஓடிக்கொண்டேயிருப்பதன் நடுவே சிறிது இளைப்பாறி பின் ஓடினாரெனில் அதை விடவேகமாக அவரால் ஓடமுடியும் அல்லவா! ஏன் இந்த யுக்தியை நாம் மனதிற்கு பயன்படுத்தக்கூடாது! ஓய்வளிக்கும் தூக்கத்திலுமா காரியங்களைப் பற்றி சிந்திப்பது! இவ்வாறு ஏற்படும் ஒரு விதமான களைப்பினால், மனம் திணறி சினமாகின்றது. பிறகு அந்த மனம் கணமாகின்றது, மனம் தனது சக்தியை இழக்கும் பட்சத்தில் இறுக்கமாகிவிடுகின்றது, மனதில் உருவாகும் இவ்வெற்றிடத்தில் ஏற்படும் ஒருவித தாக்கம் மனஅழுத்தமாகின்றது.
மனச்சுமை என்பது என்ன?
நமது உள்ளங்கையில் ஒரு சிறிய பொருளை சிறிது நேரம் ஏந்திய வண்ணம் கையை உயர்த்தி வைத்திருந்தாலே வலி ஏற்படும். அதுவே ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் வைத்திருந்தால் கைமுழுவதும் வலி ஏற்படும் அல்லவா! அதேபோன்று மனதில் ஆண்டாண்டு காலமாய் ஏதாவதொரு விசயங்களை வைத்துக் கொண்டேயிருந்தால் ஏற்படுவது தான் மனவலி. தேவையற்ற, கடந்த, நடந்த, நடக்கப்போகின்ற விசயங்களைப்பற்றிய எண்ணங்களை வைத்திருந்தால் அதற்கு பெயர் தான் மனச்சுமை! மனம் ஒரு மிருதுவான கண்களுக்கு தெரியாத பொருள். அதில் இத்தனை பொருள்களை சுமையாக ஆக்கினால் அது என்னதான் செய்யும்! மனதில் நல்ல விசயங்கள் கூட அதிகமானாலும் அதுவும் மனச்சுமைதான். மகிழ்ச்சி அதிகமாக இருக்கும் தருணத்தில் மனஓய்வளிக்கும் தூக்கம் கூட சிலருக்கு வருவதில்லை. எண்ணங்களுக்கும் ஒரு எடையுண்டு, நல்லவையோ கேட்டவையோ அதிகமானால் நிச்சயம் பிரச்சனையை உருவாக்கும்.
மனதை அழுத்தாதீர்கள், மனதை ஆலிங்கனம் செய்யுங்கள்.

நம் மனம் மிக மென்மையானது, அதே நேரத்தில் அது மிகச் சக்திசாலியானது. அதில் தீய விசயங்களை வைத்தால், அந்த தீயவையும் சேர்த்து சக்திசாலியாக்கிவிடும், எனவே மிகக் கவனம்! மனதிற்கு நீங்களே இராஜா. நீங்கள் எதைக் கூறினாலும் அதைச் சரியாக செய்யும் ஒரு சிறந்த நண்பனும் மனம்தான்.. அதே நேரத்தில் நீங்கள் கூறும் தவறான வேலையால் தனது எஜமானுக்கு ஆபத்து என்று தன்னைத்தானே திருத்தி மாற்றிக் கொள்ளத் தெரியாத பகைவனும் அந்த மனம் தான். இதுதான் மிகப்பெரும் ஆபத்தை உருவாக்குகின்றது. அப்படிப்பட்ட அந்த மனம் நாம் சொல்வதை கெட்டு நடக்கும் ஒரு குழந்தை என்பதை மறவாதீர்கள். அதை தவறாக வளர்த்தால் கடா போன்று நம் மார்பிலே பாயவும் செய்யும். என்பதையும் மறவாதீர்கள்.
மன ஓய்வு
சிலர் சிறிய வேலைக்கு கூட அவசியத்தைவிட அதிகமாக யோசிப்பது வழக்கமாக வைத்திருப்பார்கள். இது முற்றிலும் தவறு. ஒரு காரியம் நல்லபடியாக முடிக்க வெறும் எண்ணங்கள் மட்டும் போதாது, அதன் கூடவே செயலும் தேவை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
யோசித்துக்கொண்டேயிருக்கும் ஒரு வித அடிமைத்தனத்தால் நேரம் கடந்து செல்வதே சிலருக்குத் தெரியாது. ஆனால் காரியம் ஒன்றும் கைகூடியிருக்காது.
அவசியத்தை எண்ணுங்கள், அலட்சியமான அனாவசியத்தை அகற்றுங்கள்.
ஒரு வேலை செய்ய ஒருவருக்கு குறைந்தபட்சம் ஒரு எண்ணமே போதுமானது. ஒரு வேலைக்கு பல எண்ணங்களை எழுப்பி ஏன் மன ஓய்வை கேடுத்துக் கொள்ளவேண்டும்? எடுத்த காரியம் வெற்றி அடையும் வரை அந்த ஒரு எண்ணத்தை அந்த தருணத்தில் மட்டும் திரும்ப திரும்ப நினைக்கலாமே தவிர மனதை அழுத்தும் தேவையற்ற எண்ணங்களுக்கு இடந்தராமை மிகநன்று
அனைத்து இயந்திரங்களுக்கும் உதிரிப்பாகங்கள் உண்டு, ஏன் உடலுக்குக் கூட உதிரிப்பாகங்கள் கிடைகின்றன. ஆனால் கண்களுக்கு தெரியாத அதிசயமான மனதிற்கு மட்டும் எங்கும் கிடைக்காது. அதை சரி செய்வதற்கு கூட வெளியில் சரியான மெக்கானிக்கோ, உபகரணமோ கிடையாது. அப்படிப்பட்ட அந்த மனதை எவ்வளவு பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்! அவரவர் மனதே பெரிய மெக்கானிக். மனதினுள்ளேதான் அதற்கான மருந்தும் உள்ளது. பல மனோதத்துவ நிபுணர்கள் கூட அந்த மனதின் மருந்தை உணர்த்தும் சிகிச்சையைத் தான் படித்துள்ளனர். உங்கள் மனதை பாதுகாக்க எளிய வழி உங்கள் மனதிற்குள்ளேயே ஒளிந்துள்ளது.
எதிர்பார்ப்புக்கள் இன்று உலகில் அதிகமாகிவிட்டது. எனக்கு தீபாவளி வாழ்த்து கூறவில்லை, பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை என்றெல்லாம் தனது மன மகிழ்ச்சியை ஒரு பொருளிலோ அல்லது ஒரு வைபவத்திலோ வைத்திருந்தால் உண்மையான மன மகிழ்ச்சியை எப்படி பெறமுடியும். பொருள்களும் நிகழ்ச்சியும் நிரந்தரமல்ல, மனமகிழ்ச்சியோ நிரந்தரமாக தேவைப்படுவதாகும்.
மனமகிழ்ச்சியை அடையும் வழிகள் கூட இன்று நேரடியாக இருப்பதில்லை. இது தான் மனமகிழ்ச்சி அடையும் வழி என்று யார் யாரோ எப்படியெல்லாம் கூறினார்களோ அப்படிஎல்லாம் தன் மனதை அலைபாய விட்டுவிடுகின்றனர். உதாரணமாக நேரடிப் பாதை இருப்பது தெரிந்தும், ஒரு சுவாரசியம் மற்றும் பொழுதுபோக்கிற்காக தவறான குறுக்குபாதைகளை (கண்ணாம்மூச்சி விளையாட்டை) தேர்ந்தெடுக்கிறார்கள். நிச்சயமாக குறுக்குவழிப் பாதையில் பிரச்சனைக்கு அதிபட்சம் வாய்ப்பு இருக்கும் என்பதும் அனைவரும் அறிந்துள்ளார்கள். இப்படியெல்லாம் உண்மையான மனமகிழ்ச்சியை தொலைத்துவிட்டு பின்பு யோசித்தால் அந்த மனம் தான் என்ன செய்யும்? மனதில் ஒரு வழிப்பாதையை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும். அதில் என்னவோ பின்நோக்கி திருப்பும் வசதியிருக்காது, ஆனால் “வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டே இரு“ என்ற ஒரு நிலையான சட்டம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளவும். மாற்றுப் பாதைகளில் எப்படி வேண்டுமானாலும் செல்லலாம், வாழ்க்கையில் ஒரு ஒழுக்கம் என்பது இருக்காது. உண்மையான நேரடிப் பாதையிலும் பிரச்சனைகள் வரும், ஆனால் தற்காத்துக்கொள்ள வாய்ப்பும் வசதியும் நிச்சயம் இருக்கும், அது உங்கள் மனதிற்கு இளைபாற்றலைத் தருமே இன்றி மனத்தளர்வைத் தராது என்பது மட்டும் நிச்சயம்.
தன் மனம் ஆரோக்கியமாக இருக்கும்பொழுதுதே தன்னைச் சார்ந்தவர்களின் மனதிற்கு எந்த துக்கமும் கொடுக்காமல், எண்ணங்களால் சுகம் கொடுப்பவர்களின் மனம் எப்பொழுதும் பாதுகாப்பாக மிக இலேசாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மனதைக் கொல்லாதீர்கள், வெல்லுங்கள் !
மனதை வெறுக்காதீர்கள், மாற்றுங்கள் !
மனதைத் திட்டாதீர்கள், திசைத் திருப்புங்கள் !
மனதை அலைக்கழிக்காதீர்கள், அன்போடு அரவணையுங்கள் !



