பிரம்மா குமாரி. உமா, மதுரை
இன்று பாரத தேசத்தில் மட்டுமின்றி உலக அளவில் மதம், ஜாதி, இனம் மற்றும் வகுப்பு வாதப் பிரிவினைகளினால் பெரும் பிரச்சனைகளை ஒவ்வொரு தேசமும் எதிர்கொண்டு வருகின்றனர். அதற்கு ஒவ்வொரு தேசம் மட்டுமின்றி ஒரு சிறு குடும்பம் வரை இன்று சமயம். நன்னெறி மற்றும் ஆன்மிகம் சார்ந்த சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுதே நல்லிணக்கம், சகோதரத்துவம், மனித நேயம், தொண்டு மனப்பான்மை மற்றும் பண்பாடுகள் தழைத்தோங்கும். அது மட்டுமின்றி தனி மனித வாழ்வில் உடல், மனம், சமுதாய ஆரோக்கியம், தூயமனநிலை, மன இறுக்கமற்ற வாழ்வு, மனோபலம் போன்றவை மிகவும் அவசியமானதாகும். இதற்கு நமது நடத்தை மற்றும் சில பயிற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. உடற்பயிற்சி, யோகாசனம் மற்றும் மூச்சுப்பயிற்சியினால் உடல் ஆரோக்கியத்தை அடைந்து அதன் மூலம் மன ஆரோக்கியத்தைப் பெற முயற்சி செய்து வருகின்றனர். உண்மையில் மன ஆரோக்கியத்தால் தான் உடல் ஆரோக்கியம் கிடைக்கும். அதுமட்டுமின்றி சமுதாய ஆரோக்கியத்தையும் பெற முடியும் என்பது நாம் அறிந்ததே!
பாரதத்தில் ஆதிகாலம் தொட்டு பழமையான யோகமுறைகள் பழக்கவழக்கத்திலும் புலக்கத்திலும் இருந்து வருகின்றது. பாரதத்தின் அனைத்துப் பண்பாடுகளும் யோகமுறைகளின் ஆதாரத்தில் தான் உள்ளது. யோகமுறைகள் இன்று மேலைநாட்டிலிருந்து தான் இங்கு வந்துள்ளதாக பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றன. உண்மையில் மேலைநாட்டுப் பண்பாடுகள் பாரதப் பண்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனவே முதலில் அங்குப் பாரத யோகமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலைநாட்டு தலைகீழானக் கலாச்சாரம் பாரதத்தில் எப்பொழுது கலக்க ஆரம்பித்தோ அப்பொழுது தான் இங்கு நமது ஆதி யோகமுறைகளை நாமே கல்வியாக கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் மேலைநாட்டில் இந்த யோகமுறைகளின் விழிப்புணர்வு மேலோங்கியிருந்ததால் அவர்களிடமிருந்து இங்கு வந்ததாகத் தோன்றுகின்றது. சில சூழ்நிலையும் ஏற்பட்டுவிட்டது. உண்மையில் ஆரம்பகாலகட்டத்தில் இந்திய கலாச்சாரத்தில் காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை இயற்கையான யோகமுறை வாழ்க்கையோடு கலந்திருந்தது என்பது நாம் அறிந்ததே. உதாரணமாக, இன்றும் இல்லங்களில் கீழே அமர்ந்து உணவு உட்கொள்ளும் பழக்கங்கள் இருந்து வருகின்றது. சில வியாபாரத்தளங்களிலும் கூட இந்த முறை இருந்து வருவதை நாம் கண்டிருப்போம். இந்த யோக முறைகள் நமது ஆதிப்பண்பாடு. இதைத் தனியாக கற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது கண்டு வியப்படைவதா அல்லது வரவேற்பதா?
விலங்குகளின் வாழ்க்கை முறைகளை நன்கு கவனித்துப் பார்த்தால் அனைத்தும் யோகமுறையாக இருப்பது விளங்கும். அதனிடமிருந்து நாம் கற்றுக் கொண்டோமா அல்லது நாம் அதற்கு கற்றுக்கொடுத்தோமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். அவைகள் நமக்குக் கற்றுக்கொடுக்கும் சூழ்நிலை மனித குலத்திற்கு ஏற்பட்டிருப்பது ஓர் அவலநிலை என்பதில் ஐயம் இல்லை. இப்பொழுதெல்லாம் சிலவீட்டு விலங்குகள் கூட நாகரிகத்தின் சங்கிலிகளில் கட்டுண்டு இருப்பதைக் காணும் பொழுது மனிதப் பண்பாடு சீர்குலைந்து, விலங்குகளையும் சீர்குலைத்துள்ளது என்பது புலனாகின்றது.
200க்கும் மேற்பட்ட யோகமுறைகளில் ஒரு சில யோகங்களைத் தவிர மற்றவைகள் எல்லாம் மனம் சம்பந்தப்பட்டவையே உதாரணமாக, யோகாசனம் செய்யும் பொழுது மூச்சை நன்றாக உள்ளே இழுத்து மெதுவாக உடற்பயிற்சியை மேற்கொள்கின்றோம். மூச்சினை இழுக்கும் போது மனது ஒருமுகப்படுகின்றது. அதுமட்டுமின்றி மனம் தேவையற்றதையெல்லாம் மறக்கின்றது. அப்பொழுது எண்ணங்கள் சீராகி, உடலையும் சீராக்குகின்றது. இப்படியாக யோகப்பயிற்சியில் அனைத்தும் மனம் சம்பந்தப்பட்டவையே! மனதைப் பக்குவப்படுத்தினால் உடல் ஆரோக்கியம் தானாக ஏற்படும். மனதை உன்னதமாக்க ஒரே வழி தியானமாகும். இதை மனப்பயிற்சி (யோகம்) என்றும் அழைக்கப்படுகின்றது.
யோகா என்ற சொல் “யூஜ” என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பிறந்ததாகும். யூஜ் என்றால் தொடர்பு,நினைவு, இணைப்பு (to connect) என்று பொருள்படும். உடலையும் மனதையும் இணைக்கும் யோகத்திற்குப்பெயர் யோகாசனம். மனிதன் மனிதனோடு ஏற்படும் மானசீகமான நினைவிற்கு ( Remembrance) பெயர்மானிடயோகமாகும்(வியக்தயோகா). உயர்ந்த மனிதர்களோடு (தேவாத்மாக்கள்) ஏற்படும் மானசீகதரிசனத்திற்கு(Meeting) பெயர் தெய்வீக யோகமாகும். ஆனால் ஆத்மாக்கள், உயர்ந்ததிலும் உயர்ந்தஆத்மதந்தையுடன்; உள்ளன்போடு ஏற்படும் கவர்ச்சிக்குப்(Attraction ); பெயர் இராஜயோகமாகும். மனதினால்ஏற்படும் தொடர்புகள் அனைத்தும் யோகம் என்றே அழைக்கப்படுகின்றன.
கீதையில் ஆத்மா மற்றும் பரமாத்மாவிற்கும் இடையே ஏற்படும் தொடர்பை, கர்மயோகம், ஞானயோகம்,பக்தியோகம், சன்னியாசி யோகம் மற்றும் அர்ப்பணயோகம் போன்றவைகளாக மிகத் தெளிவாகக்கூறப்பட்டுள்ளது. இவையனைத்தும் மனம் சம்பந்தப்பட்டவையே.
இ றைவனின் நேரடித் தொடர்பில் வரும்மனம் குழம்பிய ஒரு சராசரி மனிதருக்கு, அவர் தம் ஞான உபதேசத்தால் மனதைப் பக்குவப்படுத்தி,எதிர்வரும் அனைத்து தடைகளையும் தகற்க்கச் செய்கின்றார். மனிதன் மனத்தொடர்பின் ஆதாரத்தில்இறைவனிடம் கொண்ட அன்பிற்கு பிரதி உபகாரமாக தானே உடன் நின்று பல உதவிகளைவழங்கியதாகக் காட்டப்பட்டுள்ளது. நாமும் இறைவனுடன் மானசீகமாக பேசி. தொடர்பு கொண்டு அவரின்உதவிகளைப் பெறலாமே! மற்றும் இறைத்துணையை அனுபவிக்கலாமே! முடியும், மனப்பயிற்சியால்அனைத்தும் சாத்தியமே. மனதைப்பற்றி நன்கு அறிந்தவன் தான் மனிதன். மனபோகத்தில் இல்லாமல்மனதை ஒரு இறைவனுடன் ஒருமுகப்படுத்துபவரே யோகி. அவரே மனமகிழ்ச்சியை அடைந்தவராவார்.
சக்திகள் அனைத்தும் மேலிருந்து கீழே செல்லும் என்பது விதி. அதாவது சக்திசாலிகளிடமிருந்து தான்பலகீனமானவர்களுக்கு செல்லும். இன்று கலியுகத்தில் மனிதர்களின்; உடல் மற்றும் மனம் அனைத்தும்மிகப் பலகீனமாக உள்ளது. பலகீனமான மனிதனை சக்திசாலியாக்கும் அளவிற்கு மனப்பக்குவம் உலகில்எந்த மனிதனுக்கும் இல்லை. இறைச் சக்தி ஒன்றே மனிதனை சக்திசாலியாக்க வல்லது. அவருடன் ஏற்படும்மானசீகமான தொடர்பு ஒன்றால் தான் இந்தப் பலன் கிட்டும். அதற்கு பெயர்தான் யோகமாகும்.இராஜயோக தியானத்தில், உடலையாளும் ஆத்ம(ஆன்மிக) ஞானம் இறைவனிடமிருந்து சக்தியின் உருவில்கிடைக்கின்றது. ஆன்மிகம் இல்லாத எந்த யோகமுறையும் நம்மை கரைத்தேற்றாது. சில உடல்ஆரோக்கியத்திற்காக மட்டும் மேற்கொள்ளும் யோகத்தில், ஆன்மிகம் நிறைந்த மன ஆரோக்கியம்இருப்பதில்லை. மனஆரோக்கியத்தினால் எளிமையான முறையில் உடல் மற்றும் சமுதாய ஆரோக்கியம்பெறமுடியும்.
செல்வம், காலம், சக்தி, குணம் மற்றும் ஆரோக்கியம் என்பதெல்லாம் வாழ்க்கைக்கு முக்கியமானதாகும். இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து உள்ளது. ஆதாவது மனதுடன் தொடர்புள்ளது.வெறும் ஆரோக்கியத்தை மட்டும் வைத்து என்ன செய்வது! மேலே கண்ட அனைத்தும் மனதில் எழும்எண்ணத்துடன் நேரடித் தொடர்புடையது. எண்ணமின்றி நாமில்லை. நாமின்றி எண்ணமில்லை. ஏன்மற்றவைகள் இல்லை என்றாலும் வாழலாம், எண்ணமில்லை என்றால் வாழ்க்கையில்லை. எண்ணம் போல்வாழ்வு என்பதை மாற்றிச் சொல்ல யாராலும் முடியாது. நாகையைச் சார்ந்த கீச்சாங்குப்பம் என்ற ஒருகிராமத்தில் சுனாமிப் பேறலை தாக்கிய போது அந்த முழுக் கிராமமே பாதிப்புக்குள்ளானது.ஆச்சரியவசமாக அதில் ஒரு தியானப்பயிலரங்கம் மட்டும் எந்தப் பாதிப்புமின்றி சீர்குலையாதிருந்தது.தியானத்தில் எழும் ஆக்கப்பூர்வமான எண்ண அலைகளை சுனாமிப்பேறலையே விரும்புகின்றன.அப்படிப்பட்ட இடங்களை அழிக்காமல் விட்டுவிடுகின்றது. சுத்தமான எண்ணங்கள் கொண்டவர்களைஎந்த இயற்கைச் சீற்றமும் அலக்கழிப்பதில்லை.
ஒருவரை கருநாகப்பாம்பு ஒன்று தீண்டியது, மருத்துவனையில் தீவிர சிகிச்சையால் விஷம் நீக்கப்பட்டுஉயிர் பிழைத்துவிடுகின்றார். ஆனால் அவரைத் தீண்டிய கருநாகப் பாம்பு ஒரு செயற்கையானது என்றும், ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்ட ஒரு சூழலில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் பிறகு தெரியவந்தது.பிறகு எப்படி அந்த கருநாகத்தின் விஷம் அவருக்குள் பரவியது? என்பது மிகப்பெரிய வியப்பானதாகஅமைந்தது. எண்ணத்தால் நல்லதைத் தீயதாகவும் தீயதை நல்லதாகவும் ஆக்கமுடியும் என்பது அந்தஆராய்ச்சியின் முடிவாகும். எண்ணங்களின் அழுத்தம் சீரானால் அனைத்தும் சீராகும். ஏன் உடலின்அனைத்து உறுப்புகளும் சீராக வேலை செய்யும். எனவே
- உற்சாகமான எண்ணங்களால் உங்களையே உற்றுப் பாருங்கள்;
- உயர்வான எண்ணங்களால் உலகினைப் படியுங்கள் ;
- இயல்பான எண்ணங்களால் இறைவனிடம் கேளுங்கள்;
- அவசியமான எண்ணங்களால் தேவையானவற்றை நம்புங்கள் ;
- நல்ல எண்ணங்களால் போராடிப் பாருங்கள்;
- சாதாரண எண்ணங்களால் தீயவையை ஒதுக்குங்கள் ;
- வீணான எண்ணங்களின் விளைவை புரிந்து கொள்ளுங்கள் ;
- தீய எண்ணங்களினால் ஏற்படும் அழிவை அகற்றுங்கள்;
- ஊக்கமான எண்ணங்களால் உண்மையை உணருங்கள்;
- தைரியமான எண்ணங்களால் வெற்றிக் கொள்ளுங்கள்;
இதுவே சராசரி மனிதனுக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான யோகமுறையாகும். எண்ணங்களைஅழுத்துவது, எண்ணங்களற்ற நிலையிருப்பது போன்ற யோகமுறைகளை மேற்கொள்வது நம்மையேகொல்வதற்கு சமம்.
உடலுக்கான யோகப்பயிற்சி என்பது ஒரு மரத்தில் இருக்கும் இலை, மலர், காய், மற்றும் கனிக்கு விடும் தண்ணீர் போன்றது. ஆனால் மனப்பயிற்சி என்பது விதைக்கு கொடுக்கும் சக்தி போன்றதாகும். இன்றுவியாதிகள் 80 சதவீதம் மனப்பிரச்னையினால் வருகின்றது என்று மருத்துவ ஆராய்ச்சி கூறுகின்றது. இன்றைய உலகில் உள்ள உடல் சம்பந்தமான யோகப்பயிற்சிகள் மிகவும் அவசியம் தான். மனமதுசெம்மையானால் மந்திரம் கூட செபிக்கவேண்டாம் என்று கூறுவார்கள். ஆனால் மனமது செம்மையாகும்வரை மந்திரம் கூட அவசியம் தான். மனப்பயிற்சியுடன் கூடிய உடற்பயிற்சி மிக அவசியமானதாகும். ஒருவர் செய்யும் உடற்பயிற்சியைப் பார்த்து திரும்பச் செய்வது மிகவும் எளிதாக இருக்கும். ஆனால்உணர்வின் ஆதாரத்தில் மனதால் செய்யும் யோகப்பயிற்சி மிகவும் கடினமானதாகத் தான் தோன்றும். உண்மையில் உணர்ந்து உளமாரச் செய்யும் எந்தப் பணியும் மிக எளிதாக இருக்கும். இது அதிவிரைவில்அதிக பலனையும் தரும். எந்தப் பயிற்சியை மேற்கொண்டாலும் மனமது தான் தனக்கு என்ன கிடைக்கவேண்டும் என்று நினைக்கின்றதோ அதை அது அடைந்துவிடும் என்பது உறுதி. எனவே மனப்பயிற்சியில்லாதயோகம் உப்பில்லா பண்டம் போன்றதாகும்.
- நல்ல எண்ணங்களை எழுப்புவது…
- வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது…
- அடிமையான மனதில் அமைதியை அனுபவிப்பது ….
- நித்தம் எதிர் வரும் பிரச்சனையில் நிதானம் …
- சுயநலமின்றி பொதுநலம் கொள்வது ….
- மனதின் ஓட்டத்தை நற்பாதையில் திசைதிருப்புவது ….
- கட்டுக்குள் இருக்கும் மனதை சுதந்திரமாக்குவது …
- அனைத்து எல்லையையும் கடந்து பறந்த நிலையில் இருப்பது …
- எச்சூழ்நிலையிலும் எச்சாpக்கையாக இருப்பது …
- எண்ணங்களின் மோதலைக் கடந்து கலந்திருப்பது …
- உங்கள் உடலை மட்டுமின்றி உங்களை நீங்களே ஆளுவது …
- தடைகளைத் தாண்டிய எண்ணங்களைக் கொள்வது …
- ஆன்மிக ஞானத்தினால் தெளிவை அடைவது …
- தூய உறவை மேற்கொள்வது… இதுபோன்ற
உண்மையான ஆத்மிக விழிப்புணர்வே உண்மையான யோகமாகும்.
உங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்க, தியானக் கலையை நோக்கி தினமும் கீழ்க்கானும் படிகளில் ஓர் அடி எடுத்து வையுங்கள்.
- முதலில் உங்கள் கால அட்டவணையில் தியானத்திற்காக, தினமும் காலை அல்லது மாலையில் 10 அல்லது 15 நிமிட நேரத்தை உங்களுக்காக நீங்களே ஒதுக்குங்கள்.
- மெல்லிய ஒளி மற்றும் இரம்மியான இசையில் சரியான சூழ்நிலையை உருவாக்கும் ஓர் அமைதியான இடத்தை தேடி அலையாமல், இருக்கும் இடத்தையே மனதிற்கு பிடித்தமான இடமாக கருதி உங்கள் மனதை உங்களுக்கு நீங்களே சற்று இளைப்பாற்றுங்கள்.
- கண்களை திறந்த வண்ணம் உற்று நோக்காமல், இதமாக உங்கள் கண்களை உங்கள் முன் இருக்கும் ஏதேனும் ஒர் ஒளிப்புள்ளியில் இயற்கையாக நிலைநிறுத்துங்கள்.
- பலவந்தம் செய்யாமல் மென்மையாக உங்களை நீங்களே அனைத்து ஒளி மற்றும் ஒலியிலிருந்து விடுவித்துக் கொள்ளுங்கள்.
- உங்களது எண்ணங்களின் வெளிப்பாடுகளை உங்களுக்கு நீங்களே மெதுவாக கவனியுங்கள். எழும் சிந்தனைகளைத் தடுத்து நிறுத்தாதீர்கள். தீர்மானிக்கவும் வேண்டாம். கவனிப்பவராக மட்டும் இருங்கள். உங்களது எண்ணங்கள் உங்களை வெளியே ஈர்த்துச் செல்லவிடாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
- சீராக எண்ணத்தின் வேகத்தைக் சிறிது குறைத்து உங்களுக்கு நீங்களே அமைதியின் அனுபவத்தை செய்யுங்கள். அமைதி வெளியேயின்றி என்னுள் இருப்பதாக அனுபவம் செய்யுங்கள்.
- உங்களுக்கு நீங்களே ஒரு ஆக்கபூர்வமான எண்ணத்தை உருவாக்குங்கள், உதாரணமாக, ” நான் ஓர் அமைதியான ஆத்மா, எனது ஆத்மத் தந்தை அமைதிக்கடல் பரமாத்மா” என நினையுங்கள்.
- முடிந்தவரை விழிப்புடனான மனோநிலையில் நிலைத்திருங்கள்…
- உங்களை அலக்கழிக்கும் முன் பதிவினைகளுடனும் பிற எண்ணங்களுடனும் சண்டையிடாதீர்கள். அதை கடத்திவிடுங்கள்.
- மெதுவாக கவனித்து அதனைக் கடத்திவிட்டு பின் மீண்டும் தன்னைத் தான் ” நான் ஓர் அமைதியான ஆத்மா” என்ற எண்ணத்திற்கு திரும்புங்கள். இறைவனிடம் உங்களை ஒப்படையுங்கள்.
- சில நிமிட நேரம் திரும்பத் திரும்ப இதே மன உணர்வில் நிலைத்திருங்கள். வரும் சம்பந்தமற்ற எண்ணங்களைக் கண்டு கொள்ளாதீர்கள்.
- இறுதியாக சில மணித்துளிகள் கண்களை மூடி முழுமையான அமைதியான மனநிலையை அனுபவியுங்கள்.
இவ்வாறு எப்பொழுது நேரம் கிடைக்குமோ அப்பொழுதெல்லாம் இதைச் செய்யச் செய்ய இம்மனப்பயிற்சி எளிதாகிவிடும். வெளியில் தேடியலைந்த அமைதி தன்னுள் இருப்பதாக அதிவிரைவில் நீங்களே அனுபவம் செய்வது உறுதி. நாமே நமது மனமகிழ்ச்சியை அடையும் வழிதனை அறிந்துவிடும் போது அதில் பேரானந்தம் கிடைக்கும். மன மகிழ்ச்சி போன்றதொரு மாமருந்து அகிலத்தில் எங்குமில்லை!
தியானம் என்பது வெறும் உடல் பயிற்சி அல்ல, நாம் (ஆத்மாக்கள்) இந்த உலகம் மற்றும் இயற்கை ஆகியவற்றோடு இணைந்து செயல்படும் உணர்வை ஏற்படுத்துவதாகும். நமது வாழ்க்கை முறையை, மனநிலையை மாற்றி புத்துணர்வுடன் செயல்படும் போது இவையனைத்தும் சாத்தியமாகும். எனவே சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுவதில் நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோமே!



