– பி.கு.பாலாஜி, பிரம்மா குமாரிகள், புதுக்கோட்டை
கோட்டையூர் என்ற மிகப் பெரிய தேசத்தின் மன்னன் மித்ரவர்மன், தானம், தர்மங்களில் சிறந்து விளங்கிய அவர் துறவிகள் மற்றும் சான்றோர்களையும் நன்றாக மதித்து நடந்து வந்தார். ஒருநாள் இரவு அவரது அரண்மனைக்கு துறவி ஒருவர் வருகிறார். இந்த நேரத்தில் துறவியா? என்ற கேள்வியுடன் அவரைப் பார்க்க கொலு மண்டபத்திற்கு வருக்கிறார் மன்னர் மித்ரவர்மன். துறவிக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளை செய்து முடித்த பின் உங்களுக்கு என்ன வேண்டும் சாமி? என்று கேட்கிறார் மன்னர். இன்று இரவு உனது விடுதியில் நான் தங்கிச் செல்ல அனுமதி வேண்டும் என்கிறார் அந்த துறவி. அரண்மனையை விடுதி என்று அந்தத் துறவி மிகவும் சாதாரணமாக கூறியதைக் கேட்டதும் மன்னருக்கு கோபம் வருகிறது. என்றாலும் மிகப் பணிவுடன் அந்தத் துறவியிடம் என்ன சுவாமி, என் அரண்மனையை விடுதி என்கிறீர்களே? என்று கேட்கிறார். உடனேயே மன்னரைப் பார்த்து அந்தத் துறவி இப்படி கேட்கிறார்: உனக்கு முன் இந்த அரண்மனையில் யார் இருந்தது? என் தந்தை தான் இராஜாவாக இந்த அரண்மனையில் இருந்தார் என்கிறார் மன்னர். சரி அதற்கு முன் இந்த அரண்மனையில் யார் இருந்தார்? என்று துறவி கேட்க, என் தாத்தா மன்னராக இந்த அரண்மனையில் வாழ்ந்தார் என்று பதில் சொல்கிறார் மன்னர். சரி, உனக்குப் பிறகு இந்த மாளிகையில் யார் இருப்பார்? என்று துறவி கேட்கிறார். அதற்கு மன்னர் இதில் என்ன சந்தேகம், எனக்குப் பிறகு பிறக்கப் போகும் என் மகன் தான் மன்னனாக முடிசூட்டிக் கொண்டு இங்கு இருப்பான் என்று கூறுகின்றார். துறவி வாய்விட்டு சிரித்தபடி இந்த மாளிகையில் சிறிது நாட்கள் உனது தாத்தா இருந்தார், பிறகு அவர் போய்விட்டார். அதன் பிறகு உனது அப்பா இருந்தார், அவரும் போய்விட்டார். இப்பொழுது நீ இருக்கிறாய், நீயும் சிறிது காலத்தில் சென்று விடுவாய். உனக்குப் பின்னால் உன் மகன் இருக்கப் போகிறான். இப்போது சொல் விடுதி என்பது என்ன? சிறிது நாட்கள் ஒருவர் வந்து தங்கிச் சென்ற பின், வேறு ஒருவர் வந்து தங்கும் இடம் தானே! என்று கூறுகிறார் துறவி.
மன்னர் மித்ரவர்மனுக்கு யதார்த்தமான ஞானம் புரிய வைக்க விரும்பிய துறவி, மன்னரிடம் ஒரு மாட்டுக்காரனுடன் அவனது மாடும் வந்து கொண்டிருந்தது. கயிற்றின் ஒரு முனையை மாட்டுக்காரன் தன் கையில் பிடித்திருந்தான். மாட்டை மனிதன் பிடித்திருக் கிறானா? அல்லது மாடு மனிதனைப் பிடித்திருக்கிறதா? மாடு மனிதனிடம் அகப் பட்டிருக்கிறதா? அல்லது மனிதன் மாட்டிடம் அகப்பட்டிருக்கிறானா? என்று துறவி கேட்கிறார். இது அனைவருக்கும் தெரிந்த விசயம் தானே! மனிதன் தான் மாட்டை பிடித்து வைத்திருக்கிறான். எனவே மாடு தான் மனிதனிடம் அகப்பட்டிருக்கிறது என்றார் மன்னர்.
அதற்கு அந்த துறவி அந்த மாடு கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடினால் மனிதன் என்ன செய்வான்? என்று கேட்டார். அதற்கு மன்னர் அந்த மாட்டைப் பிடிக்க அதன் பின்னே ஓடுவான் என்றார். இந்த நிலையில் மாடு மனிதனிடம் அகப்பட்டுள்ளதா? அல்லது மனிதன் மாட்டிடம் அகப்பட்டுள்ளானா? என்று மீண்டும் கேட்டார் துறவி. மன்னர் சற்று சிந்திக்கத் தொடங்கினார் மனிதன் கயிற்றை விட்டு விட்டு ஓடினால் மாடு அவன் பின்னே ஓடாது. ஆனால் மாடு கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடினால் மனிதன் கட்டாயம் அதன் பின்னே ஓடுவான். அகப்பட்டிருப்பது யார்? மாடா? மனிதனா? உண்மையில் மனிதன், மாட்டின் மீது ஆசை கொண்டுள்ளான். அதை விட்டு விட அவனால் முடியாது. இப்படித் தான் மனிதன் உலகம் மற்றும் உலக சாதனங்களின் பிடியில் அகப்பட்டுள்ளான், ஆனால் சாதனங்கள் தான் அவன் பிடியில் இருப்பதாக நினைத்துக் கொள்கிறான் மனிதன் என்று கூறி மன்னருக்கு பிரமை எது? யதார்த்தம் எது? என்று புரிய வைத்தார் துறவி.
இறைவன் கூறுகின்றார் இனிய குழந்தைகளே! நீங்களும் இந்த உலகத்தில் வழிப்போக்கர்களாக வந்தீர்கள். ஆனால் வந்த இடத்தில் நான், எனது என்ற பந்தனங்களில் மாட்டிக் கொண்டு தங்களது அமைதியான, மகிழ்ச்சியான, சுகமான வாழ்க்கையை தொலைத்து விட்டீர்கள். மீண்டும் ஜீவன்முக்தியின் அனுபவம் செய்ய வேண்டுமெனில் நான் டிரஸ்டியாக இருக்கிறேன், இறைவன் எஜமானாக இருக்கின்றார். உடல், மனம், பொருள் அனைத்தும் இறைவனுடையது, அனைத்தையும் அவர் எனக்கு கொடுத்திருக்கின்றார் என்று நினையுங்கள்.



