பி.கு. செண்பகராஜ், பிரம்மா குமாரிகள், மதுரை
ஒவ்வொருவரின் அந்தராத்மாவில், அடங்கிக் கிடக்கும் அளப்பெரிய சக்தியே மனம். மனம் என்பது ஒரு கண்ணாடி என்றும், மல்லிகைப் பூ என்றும், இறுதியில் அதை குரங்கு என்றும் கூற நாம் தவறியதில்லை. அப்படியாயின் அந்த மனதிலே அனைத்தையும் செய்விக்கும் மாமந்திரங்கள் அடங்கியிருக்கும் என்பது கண்கூடான விசயம்.
மனம் என்ற மாளிகையில் நம்மை மயக்கவைக்கும் வாசனை தரும் எண்ணங்களும் உண்டு, மலையென வரும் இன்னல்களை வெற்றி கொள்ள வைக்கும் மகிழ்ச்சிகரமான எண்ணங்களும் உண்டு.
அனைத்து செயல்களுக்கும் மனதில் எழும் எண்ணங்களே விதை போன்றது. விதையின்றி விருக்ஷம் இல்லை. ஒவ்வொரு நாளும் மனித மனதில் எண்ணிலடங்கா ஆயிரக்கணக்கான எண்ணங்கள் அலைபோன்று உருவாகிக் கொண்டுள்ளது. அதாவது இடைவிடாது எழும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் தொடர்பும் இருக்கும். அதிகபட்ச எண்ணங்களை உருவாக்குபவர்கள் மனநல மருத்துவமனைகளில் மனநோயாளிகளாகப் பார்க்கலாம். குறைந்த தெளிவான எண்ணங்களை உருவாக்குபவர்கள் செயல்வீரர்களாக திகழ்வார்கள். வேகமில்லா விவேகத்துடன், நிதானம் நிறைந்த எண்ணங்களை எழுப்பும் யோகிகளையும் நீங்கள் பார்க்கலாம். வாழ்க்கையில் செய்துகாட்டிவர் செயல்வீரர் என்று சொல்வதைக்காட்டிலும் மற்றவர்களை தனது மனோவலிமையால் செயல்பட வைப்பவர்களே உயர்ந்தவர்கள்.
சிந்தித்தவர் புத்திசாலி,
சிந்திக்க வைத்தவர் சக்திசாலி
பொதுவாக நமது அன்றாட வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளுக்கும் பின்னே மனதின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதன் அடிப்படையில் செய்யப்படும் செயலே நாம் கண்வழியே காண முடிகின்றது. ஆனால் அந்த செயலுக்கு பின்னே நடக்கும் பல எண்ணங்களின் வினோதங்களை உணரமுடியுமே தவிர கண்களால் காண முடிவதில்லை. கண் பார்வைக்கு அப்பால் நடந்து கொண்டிருப்பவை தான் அதிசயம். அப்படியாயின் நம் ஒவ்வொருவருக்குள்ளும் நடந்து கொண்டிருக்கும் வினோதங்கள் தான் எத்தனை! அந்த மனம் என்ற வீட்டின் கதவை திறந்தால் அதை பார்த்து ரசிக்கலாம். அந்த வீட்டில் தான் என்ன இல்லை? எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானலும் அடக்கிக் கொள்ளும் மிகப்பெரிய கடல் போன்றது. அது நமக்கென்று உருவாகியுள்ள சொந்தமான தனி உலகமாகும். உடலில் ஏற்படும் ஒவ்வொரு அசைவுகளும் மனதில் பிறப்பிக்கப்படும் ஆணைகளின் அடிப்படையில், நடந்தேறிவருகின்றது என்ற உண்மையை மறுக்க யாராலும் முடியாது. உதாரணமாக, ஒருவருக்கு பல வகைகளில் மருத்துவ சோதனை செய்தும் அவரின் வியாதிக்கு காரணம் கண்டறியமுடியவில்லை, இறுதியில் அவர் உடலில் கருநாகப்பாம்பின் விஷம் இருப்பதை கண்டறிந்தனர். ஆனால் கருநாகம் தீண்டியதற்கான எந்த அறிகுறியும் இல்லை, அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். நோயாளிடம் விசாரித்ததில் – சில நாட்களுக்கும் முன் ஒரு கருநாகம் தன்னைத் தீண்டும் கனவு கண்டதாகக் கூறினார். மனம் நினைத்தால் உடலில் விஷத்தை உருவாக்க முடிகின்றது எனில் அதனால் அமிர்தத்தையும் உருவாக்கமுடியும் என்பதிலும் சந்தேகமில்லை. அதாவது மனதால் சிறு எறும்பை பூதமாக்கவும் முடியும், பெரிய மலையையும் மடுவாக்கவும் முடியும்.
மனம் நினைத்தால் எதையும் செய்யமுடியும். எதை நினைக்கின்றதோ அதுவே சத்தியமானது. ஒருவர் வாய்வழியே பொய் சொல்லலாம், ஆனால் மனம் அதை மறுக்கும் என்பது பொய் சொல்வருக்கு தெரியும். என்றும் என்றென்றும் மனமே உண்மை விரும்பி. உங்கள் மனதை நீங்களே விரும்புங்கள். அது அற்புதங்கள் செய்து காட்டும்.
மனதை அவமதித்தவர் இவ்வுலகை சீர்திருத்தமாட்டார்.
மனதை மதித்தவர் மதி இழக்கமாட்டார்,
உலர்வாயன், மனதில் வரும் எண்ணங்களை எல்லாம் வெளியில் சொல்லி விடுவார். மன இறுக்கமானவர்கள் எண்ணங்களை அழுத்தி அடைத்து வைத்துக் கொள்வார்கள். கோபம் கொள்பவர்கள் எண்ணங்களை பூதகரமாக மாற்றிக் கொள்வார்கள். மனதில் எழும் எண்ணங்களை ரசித்தவன் இரசிகன். உலக போகங்களில் எண்ணங்களை சிதரவிட்டவர் போகி. உதவிய உள்ளத்திற்கு தீங்கு நினைத்தவர் துரோகி. எண்ணங்களை கட்டுப்பாடில்லாமல் காட்டு மிருகம் போல் ஓடவிட்டவர் ரோகி(நோயாளி). ஆனால் கலைந்து செல்லும் எண்ணங்களை திசை திருப்பி ஒரு இறைவனிடம் செலுத்திவர் யோகி. எதையோ ஒன்றை பிடித்துக்கொண்டு அதையே வாழ்க்கை என எண்ணும் மனப்பிரம்மை பிடித்தவர்களும் உண்டு. மலர் போன்று மென்மையான எண்ணங்களை உடைய குழந்தை மனம் கொண்டவர்களும் உண்டு. எண்ணங்களுக்கு அடிமையாகி மதிமயத்தில் உள்ளவர்களும் கோடான கோடிபேர் உண்டு.

இப்போதே… உங்கள் மனக் கதவை சற்று திறந்து, உற்றுப்பாருங்கள், அதில் எழும் எண்ணங்களை கண்டறியுங்கள். “ உற்றுப் பாருங்கள் ” என்ற கட்டளை கூட அங்கு ஒரு எண்ணமாக இருப்பதை காண்பீர்கள். அதுபோன்று ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் மனதில் எண்ணங்களின் உருவில் பல பொக்கிசங்கள் இருப்பதை உணர்வீர்கள். இந்த மனஅறைக்கு வியாபித்துள்ள உங்களை அங்கேயே நிலை நிறுத்தி வைக்க யாராலும் முடியாது. அங்கு ஒருவரை அழைத்துச் செல்வதே அரிதான பெரிய விசயமாகும். ஒரு வேளை நீங்கள் அங்கு இருக்க விரும்பி, அந்த அறையினுள் உள்ள வினோதமான எண்ணங்களை அலசி ஆராய முற்பட்டால், உங்களையே நீங்கள் கைகொள்ள முடியாத இடத்திற்கு உயர்த்தி விட்டீர்கள் என்று அர்த்தம். இந்த மனம் என்ற அறை மிகவும் அமைதியானது. ஆழ்ந்த அமைதியான நீர்ப்பரப்பிலே ஒரு கல்லை போட்டால் எழும் அலைகள் போல் அங்கு வட்டவட்டமாய் எண்ணங்கள் எழுகின்றது. மற்றபடி அது ஒரு நிசப்தமான இடமாகும். அந்த மனதில் நீங்கள் எவ்வளவு எண்ணங்களை வரவழைத்துக் கொண்டாலும் ஒரு ஸ்பிரிங் போல அது தனது சாசுவதமான நிலைக்கு தானாகவே திரும்பி விடும். பிரச்சனை என்று வந்துவிட்டால், “தானாக சரியாகிவிடும்” என்றும் “டேக் இட் இசி ” (பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்) என்றும் அதனால் தான் கூறுகின்றார்கள் போலும்! அதாவது மனம் என்ற ஸ்பிரிங்கை அதிகமுறை குறிப்பிட்ட எண்ணங்களிலேயே ஆழ்த்தி அதன் தன்மையை மறக்கடித்தவர்களும் உண்டு. ஆனாலும் அதற்கு சிறிது அவகாசம் கொடுத்தால், நிதானித்தால், நீ தியானித்தால், தனது பழைய அமைதியான மனோநிலைக்கு அதை அழைத்து வரவும் முடியும். ஆகையால் தானோ, மனஅமைதிக்கு, தியானமே மாமருந்தென்றும், உன்னதமான வழி என்றும் அனைவரும் ,கூறுகின்றார்கள் !
மனதில் எழும் எண்ணங்களை அறிந்தாலே தன்னை அறிந்ததாக அர்த்தம். அந்த எண்ணங்களின் வகைகளை பிரித்து புரிந்து கொண்டாலே தன்னைப் பற்றி புரிந்ததாக அர்த்தம். புரிந்த எண்ணங்களை செயல்வடிவில் செய்து அனுபவித்தாலே தன்னை தானே அனுபவித்ததாக அர்த்தம். அனுபவங்களின் பலம், நாளடையில் தன்னை உணர்ந்தவனாக உயர்த்தும். தன்னை உணர்ந்தவர்களே இறைவனை உணர்ந்தவர்களாகவும் உலகை உணர்ந்தவர்களாகவும் போற்றப்படுவார்கள்.
ஒன்றை மறைக்க மறைக்க அதன் சக்தி இனம் தெரியாமல் சென்றுவிடுகின்றது. எண்ணம் என்ற மாபெரும் சக்தியை பற்றி முன்னோர்கள் கூறினும் அதை மறந்து, அதன் நல்சக்தியை காரியத்தில் பயன்படுத்தாது மறைத்து, வந்துள்ளோம். சாமி தரிசனத்திற்கு திரை விலகக் காத்திருப்பது போன்று மனம் என்ற திரைக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் ஆக்கபூர்வமான எண்ணத்தை இனம் காணும் காலகட்டமிது. அந்த ஒப்பற்ற சக்தியினிலே ஒவ்வொருவரும் தேடிய அனைத்தும் ஒழிந்திருக்கின்றது. தன்னுள் வைத்துக் கொண்டு இப்புவிதனிலே தலை தெறிக்க ஓடினாலும் எதையும் தனதாக்க முடியாது. எங்கிருந்தாலும் தன்னை நம்புங்கள். தனது சக்தியை உயர்த்துங்கள். அதில் தார்மீக எண்ணங்கள் என்ற தீபத்தினை ஏற்றுங்கள். குண்டு பானையில் இட்ட விளக்காக, உங்களுக்கு மட்டுமில்லாது, இந்த உலகத்திற்கே ஒளிதரும், குன்றின் மேலிட்ட விளக்காக மாறுங்கள்.
உலகத்தை மாற்ற துடிக்கும் உள்ளங்களே ! உங்களை மாற்ற உங்கள் மனதை மாற்றுங்கள். அந்த மனதிற்கு நல்லவழி காட்டுங்கள், அது ஒரு குழந்தை, அதற்கு அன்போடு கட்டளையிட்டால் அது காலமெல்லாம் கட்டுண்டு உங்கள் காலடியில் மண்டிக் கிடக்கும். உங்கள் மனதை நெருங்கும் தேவையற்ற எண்ணங்கள் என்ற கயவர்களை அடையாளம் காட்டும், உங்களை அதனின்று பாதுகாப்பு செய்யும் ஒரு விசுவாசியான தொண்டனாக மாறும். அந்த மன அவைதனை நல்எண்ணங்கள் என்ற அலங்காரப் பொருளால் அலங்கரித்தால், பெயர் புகழால் உங்களை அலங்கரிக்க வைக்கும். இறைவனே, மாமன்னன் கட்டிய திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு விஜயம் செய்யாது மனக்கோவில் கட்டிய பூசலாருக்கு மரியாதை கொடுத்தாராம். மனதால் இறைவனையும் தன் வயப்படுத்தலாம். அதிகாலையில் எழுந்தவுடன் உங்கள் மனதைப் போற்றுங்கள், மனதார தினமும் அதனுடன் பேசுங்கள், அது உங்களுடன் பேசும். தினமும் நலன் விசாரியுங்கள் அது உங்களின் நலனை பேணிக்காக்கும்.
தாக்கும் எண்ணங்களை தவிருங்கள் !
குறைகளை பார்த்து உங்களை குறைத்துக் கொள்ளாதீர்கள் !
ஆனவம் தலைக்கு ஏறாது எண்ணங்களை வளையுங்கள் !
வீணானவற்றிலிருந்து எண்ணங்களை திசை திருப்புங்கள் !
மனதை திறந்து, எண்ணங்களுக்கு மாலையிடுங்கள் !
தன்னுணர்வை அடைய, தன் உடலை மறந்துவிடுங்கள் !
எல்லாம்வல்ல இறைவனை எண்ண மறந்து விடாதீர்கள் !


